பதிவு செய்த நாள்
02
ஜன
2014
12:01
ஸ்ரீவல்ஸன் மேனன் கேரளத்தில் இருந்து மார்கழி இசை விழாவில், சில ஆண்டுகளாக பாடி வருபவர். மியூசிக் அகாடமி கச்சேரியில் பூஷாவளி ராகத்தில் கோபநந்தன எனும் கிருதியை பாடினார். தொடர்ந்த ஸ்வரங்களில் நல்ல விறுவிறுப்பு. அடுத்து, ரீதிகவுளை ராகத்தில் சுருக்கமான ஆலாபனை. வயலினில் எடப்பள்ளி அஜித்குமாரின் ஆலாபனை நறுக்கு தெறித்தது.
குரல் வளம்: தொடர்ந்து ஆதி தாளத்தில் சேரராவதேமிரா எனும் தியாகையரின் கிருதியை சங்கதிகளால் இழைத்து பாடினார். ஆலத்தூர் சகோதரர்களின் ஸ்வரங்கள் இந்த கிருதியில் பிரசித்தம். மந்தரஸ்தாயி ஸ்வர சஞ்சாரங்கள், ஸ்ரீவல்ஸனின் குரல்வளத்தை சுட்டின. கிருதியை எடுத்துக் கையாண்டதற்கு ஸ்ரீவல்ஸனை பாரட்டலாம். பந்துவராளி ஆலாபனையை வளர்த்தெடுத்த முறையிலும், சில பிடிகளிலும் செம்பை வைத்தியநாத பாகவதரை நினைவூட்டியது. குரல், வயலின் இருவருமே பூர்விகல்யாணி வாடையில்லாத பந்து வராளியை வழங்கினர். பத்ராசலம் ராமதாசர் இயற்றிய என்னகானு ராம பஜன எனும் ரூபக தாள கிருதியை பாடினார். ராம ராம ராம எனுத்ஸு எனும் வரியில் நிரவல். ராமராமராம என்ற சொற்கட்டில், குதித்தோடும் ஸ்வரக்கோர்வையில் நிரவலை அமைத்து, தடங்கலின்றி ஸ்வரங்களுள் நுழைந்தது அழகு. மாமவ பட்டாபிராமா ஜெய என்று அடுத்ததாக, மணிரங்கு ராகத்தில் தீட்சிதர் கிருதியை பாடினார். இங்கும் சங்கதிகளை தவிர்க்காமல், வழுக்காமல் கார்வைகளுடன் இழைத்துப் பாடியது நன்று.
பூரணத்துவம் எங்கே?: கச்சேரியின் பிரதான ராகம் சங்கராபரணம். ஆலாபனை, ராக அடையாளத்துடன் துவங்கியது. ஓரிரு சஞ்சலமான பிடிகளில் தொடர்ந்து மெச்சத்தக்க வகையில் திடமாய் வளர்ந்து, மேல்ஸ்தாயியில் சற்றே வடிவமிழந்து, மந்தரஸ்தாயிக்கு இறங்கி பூரணத்துவம் இல்லாமல் முடிந்தது. ஸ்வர ராக சுதா எனும் தியாகையரின் ஆதி தாள கிருதியை விரிவாகப் பாடினார்.
தனி ஆவர்த்தனத்தில்: கோட்டயம் ராதாகிருஷ்ணன், வயதை குறைத்த விறுவிறுப்பான கடம் வாசிப்பில் தன்னை அறிவித்துக் கொண்டார். மிருதங்கத்தில் நாஞ்சில் அருள், தனியில் சிறப்பித்தும், கிருதிகளில் சங்கதிகளை போஷித்தும் வாசித்த பாங்கு, பழநி சுப்பிரமணிய பிள்ளையின் பாணியை நினைவுறுத்தியது. இறுதிப் பகுதியில் முகாரி ராகத்தில் ராகம் தானம் பல்லவி. ஆலாபனை ராகம் அவருக்கு புரிந்துள்ளது என்பதைச் சுட்டினாலும், மேல்ஸ்தாயியில் அதிகம் சஞ்சாரிக்காதது குறை. தானம் நன்றாக அமைந்தது. பாலய சதா பத்மநாப கேசவா கருணாலய மாம் எனும் வரியை பல்லவியாய், மிஸ்ரசாபு தாளத்தில் வழங்கினார். மேற்கால நிரவல் பாடி, த்ரிகாலத்தில் சிறப்பாகச் செய்தார். ராகமாலிகையில் பெஹாக், சாரமதி, பவுளி, பாகேஸ்ரீ ராகங்களில் பல்லவியை பாடினார்.
சுருதியை மறப்பது ஏனோ?: இந்தியில் மாரோ ப்ரணா பாகே விஹாரிஜிவ் என்று மீரா பஜனை, யமுனாகல்யாணி ராகத்திலும், மலையாளத்தில் சுவாதி திருநாளின் இளதளிர் சயனே மனோபவ கிருதியை புன்னாகவராளி ராகத்திலும் பாடி முடித்தார். ஸ்ரீவல்ஸன் மேனனுக்கு கணீரென்ற குரல். நிரவல், லகுவாய் கைவருகிறது. எந்த மொழி கிருதியிலும் உச்சரிப்பு தெளிவு, சமஸ்க்ருதம் கலந்த மலையாளத்தால் எனலாம். பாடுகையில், தன்னை மறக்கையில் அவ்வப்போது சுருதியையும் மறக்கிறார். மார்கழி கச்சேரி மூட்டைகளில் அடிக்கடி கேட்காத உருப்படிகளை ரசிக்க, இவர் போன்ற வெளிமாநிலத்தவரை அணுகவேண்டும் எனத் தோன்றுகிறது. - அருண் நரசிம்மன் -