பதிவு செய்த நாள்
02
ஜன
2014
02:01
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக வடகிழக்கு, தென்மேற்குப் பருவமழைகள் பொய்த்தன. அதனால், காய்கறி, மலர் விவசாய சாகுபடிப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. தற்போது லாரி தண்ணீரைவிட்டு, காய்கறி, மலர் செடிகளை விவசாயிகள் காப்பாற்றி வருகின்றனர். அதனால், காய்கறி, பூ மார்க்கெட்டில் பூக்கள்வரத்து குறைந்து அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன.
புத்தாண்டையொட்டி புதன்கிழமை திண்டுக்கல், நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை பலமடங்கு அதிகரித்தது. நடைபாதை பூ வியாபாரிகள், ஒரு முழம் மல்லிகைப்பூவை அதிகபட்சமாக ரூ.50-க்கு விற்பனை செய்தனர். மார்க்கெட், நடைபாதை பூக்கடைகளில் முல்லை, மல்லிகைப்பூவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், பக்தர்கள் புத்தாண்டு தினத்தில் பூக்கள் வாங்க முடியாமல் சிரமம் அடைந்தனர்.
நிலக்கோட்டை பூ மார்க்கெட் வியாபாரிகள் இதுகுறித்து கூறியது: நிலக்கோட்டை மார்க்கெட்டுக்கு புதன்கிழமை வெறும் 6டன் மட்டுமே விற்பனைக்கு வந்தது. இந்தப் பூக்கள் சிறிது நேரத்தில் விற்றுத் தீர்ந்தன. மல்லிகைப்பூ அதிகபட்சம் கிலோ ரூ 800-க்கு விற்பனையானது. ஆனால், திண்டுக்கல் மார்க்கெட்டில் ரூ. 1000-க்கு விற்பனையானது. கனகாம்பரம் ரூ. 600, முல்லைப்பூ ரூ. 500, பிச்சிப்பூ ரூ. 450, கலர் பிச்சிப்பூ ரூ. 400, சம்பங்கி ரூ. 50. செவ்வந்தி ரூ. 40, கோழிக்கொண்டை ரூ. 40, செண்டுமல்லி ரூ. 20, மரிக்கொழுந்து ரூ. 120, மருகு ரூ. 80, துளசி ரூ. 40, ரோஜா, ரூ. 70. என விற்பனையாயின. அடுத்த மாதம் மழை பெய்யாவிட்டால் பூக்கள்வரத்து மேலும் குறைந்து விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர்.