பதிவு செய்த நாள்
03
ஜன
2014
10:01
கோபிசெட்டிபாளையம்: அளுக்குளி, கொளப்பலூர் ஆகிய கோவில்கள் நடந்த குண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி, நேர்த்தி கடனை செலுத்தினர்.கோபி அருகே அளுக்குளியில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் திருவிழா கடந்த, 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நந்தா தீபம், மஞ்சள் காப்பு, கிராம சாந்தி, கொடியேற்றம் நடந்தது. நே ற்று முன்தினம் அரண்மனை பொங்கல் விழா, குண்டம் திறப்பு, அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 7 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. அளுக்குளி, கோவை பிரிவு, குருமந்தூர் உள்ளிட் ட பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கா ன பக்தர்கள் குண்டத்தில் இறங்கினர்.இன்று காலை, 6 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரம், மாலை, நான்கு முதல், ஆறு மணி வரை தேர் வடம் பிடித்தலும், நாளை காலை, 6 மணிக்கு மஞ்சள் காப்பு அலங்காரம், மாலை, 6 மணிக்கு ரதோற்சவம் மற்றும் தெப்போற்சவம், 5ம் தேதி மஞ்சள் நீராட்டு, மாலை 6 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. கொளப்பலூர் பச்சைநாயகி அம்மன் கோவிலில், நேற்று குண்டம் திருவிழா நடந்தது. கொளப்பலூர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி, தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.