Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » நரசிம்ம மேத்தா
நரசிம்ம மேத்தா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஏப்
2011
16:56

1414- ஆம் வருடம், குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில், தலாஜா எனும் ஊரில் வசித்த பலராம் மேத்தாவுக்கு,  ஆண் குழந்தை பிறந்தது. ஸ்ரீநரசிம்ம ஸ்வாமியின் பக்தரான பலராம் மேத்தா, தன் மகனுக்கு நரசிம்ம மேத்தா எனப் பெயரிட்டு மகிழ்ந்தார். நரசிம்ம மேத்தா, சிறுவயதில் எவருக்கும் அடங்காத பிள்ளையாக வளர்ந்தார். பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றுவது, மரம் ஏறுவது, குளத்தில் நீந்தி விளையாடுவது எனப்பொழுதைக் கழித்தார். சிறு வயதில், பெற்றோரின் மரணம்தான் இவரை வேறொரு திசைக்கு இட்டுச் சென்றது. தனிமரமாகிப் போன நரஸி, ஜூனாகாத் எனும் ஊரில் வசித்து வந்த சித்தப்பா யமுனாதாஸ் வீட்டில் அடைக்கலமானார். அங்கே சித்தப்பாவின் மகனும் மருமகளும் இருந்தனர். படிப்பில் நாட்டமின்றித் திரிந்த நரஸியை, அவரின் மதனி ஏசினாள். இந்த அவமானத்தால், வீட்டை விட்டு வெளியேறிய நரஸி, அருகில் இருந்த காட்டுக்குள் ஓடி, அங்கேயே தங்கினார். பிறகு, கோபமும் வேகமும் தணிந்து, தன்னைத்தானே நொந்து, கண்ணீர் விட்டு அழுதார். அருகில், பாழடைந்த நிலையில் சிவாலயம் ஒன்று இருந்தது. அங்கே சென்றவர், சிவலிங்கத்தின் முன்னே அமர்ந்து கொண்டார். உணவு, தாகம், தூக்கம் ஆகியவற்றை மறந்து, நாட்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்தார். ஒருநாள், நரஸிக்கு திருக்காட்சி தந்தார் சிவனார். சிலிர்த்துப் போனார் நரஸி. அங்கே, சிவ சன்னதியில் அவருக்கு ஞானம் கிட்டியது. பிறகு சிவனருளால், ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளை தனது அகக்கண்ணால் தரிசிக்கும் பேறு பெற்றார். ராதை மற்றும் கோபிகையருடன் ஸ்ரீகண்ணன் புரிந்த ராஸக்கிரீடைகளைக் கண்ட நரஸி, கிருஷ்ண பக்தரானார். கண்களில் ஆனந்தக் கண்ணீரும், நாவினில் தேனினும் இனிய கவிதைகளும் பெருக்கெடுத்தன. இந்த நிலையில், நரஸியைக் காணாமல் சித்தப்பாவும் மற்றவர்களும் தேடினர். இறுதியில், சிவாலயத்தில் அவரைக் கண்டனர். அங்கே, பள்ளிக் கல்வியைக் கற்காத நரஸி, கண்ணன் மீது அர்த்தங்கள் பொதிந்த பாடல்களைப் பாடியது கண்டு வியந்தனர். அதன் பின், அனைவரின் வற்புறுத்தலுக்கு இணங்க, வீடு திரும்பினார் நரஸி. பெரியவர்களின் அறிவுரைப்படி, மானெக்பாய் என்பவளை மணந்து இல்லறத்தில் ஈடுபட்ட நரஸிக்கு, மகளும் மகனும் பிறந்தனர். ஸ்ரீகிருஷ்ணரின் புகழைப் பாடிய நரஸி மேத்தாவின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை, குஜராத் மக்கள் இன்றைக்கும் கதைகதையாகச் சொல்லிப் பூரிக்கின்றனர்.

அவற்றில் ஒரு சம்பவம்... நரஸி மேத்தாவின் மகள் வளர்ந்து, உரிய பருவத்துக்கு வந்தாள். அவளுக்குத் திருமணத் தேதியும் குறித்தாகிவிட்டது. ஆனால், நரஸி மேத்தாவிடம் சல்லிக்காசு கூட இல்லை. இருப்பினும், இறை சன்னதியிலேயே காலத்தைக் கழித்து வந்தார் அவர். அப்போது, ஜூனாகாத் பகுதியை மான்லித் என்பவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். நரஸி மேத்தாவையும் அவரின் கிருஷ்ண பக்தியையும் அறிந்த மான்லித், நரஸிக்கு பாடம் புகட்ட நினைத்தான். நரஸியைக் கைது சிறையில் அடைத்தான். உன் மகளுக்குத் திருமணம்; உன்னிடம் காசு இல்லை. ஆனால், நீயோ எந்தக் கவலையுமின்றி, கடவுள் சன்னதியிலேயே காலத்தை ஓட்டுகிறாய்? உன்னுடைய தாமோதரனின் கழுத்தில் ஜொலிக்கிற ஹாரம், சிறையில் இருக்கிற உன் கைக்கு வந்துவிட்டால், தாமோதரனையும் உன் பகுதியையும் ஏற்றுக்கொள்கிறேன். தவிர, தாமோதரனுக்கு அடிமையாகிறேன். உம்மையும் விடுதலை செய்கிறேன் என்றான் எகத்தாளமாக. இதைக் கேட்டதும், மெய்யுருகி தாமோதரனைப் போற்றிப் பாடினார் நரஸி மேத்தா. மணிவண்ணா! என்னை உன் காலடியில் இருந்து பிரித்துவிட்டாயே... நான் என்ன தவறு செய்தேன்? என அழுது புலம்பினார். பக்தனின் கதறலைக் கேட்டுச் சும்மா இருப்பாரா தாமோதரன்?! நரஸி மேத்தாவுக்குத் திருக்காட்சி தந்தார். நரஸி, கேதார ராகத்தில் என்னைப் பற்றிப் பாடு! என் கழுத்து ஹாரத்தை உனக்குத் தருகிறேன் என்று பகவான் சொல்ல... நிலைகுலைந்தார் நரஸி மேத்தா. ஐயோ... கேதார ராகத்தில் பாடமுடியாதே! அதனை அடகு வைத்து, வீட்டுச் செலவுக்கு ஏற்கெனவே பணம் வாங்கி விட்டேனே! என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினார் நரஸி மேத்தா. உடனே ஸ்ரீகண்ணன், அடகுக்கடைக்காரரிடம் சென்று, நரஸி மேத்தா தரவேண்டிய தொகையை வட்டியுடன் தந்தார்; கேதார ராகத்தை மீட்டெடுத்தார்; அதற்குச் சாட்சியாக கடைக்காரரிடம் இருந்து கடிதம் ஒன்றையும் வாங்கி வந்து, நரஸியிடம் கொடுத்தார். இப்போது பாடலாமே! என்றார் புன்னகையுடன். உடனே நரஸி மேத்தா, ஹரி ஹார் தேகா, ஹரி ஹார் தேகா எனத் துவங்கும் பாடலை, கேதார ராகத்தில் மெய்யுருகப் பாடினார்.

அப்போது, சன்னதியில் ஸ்ரீதாமோதரனின் கழுத்தில் இருந்த ஹாரம், அதுவாகவே கழன்று, மெள்ளக் காற்றில் மிதந்து வந்து, நரஸியின் கழுத்தில் மாலையென விழுந்தது! இதைக் கண்ட அரசன் சிலிர்த்தான். நரஸியின் காலில் விழுந்து, பணிந்தான். அவரை விடுதலை செய்ததுடன், நரஸியின் மகளது திருமணத்தையும் சிறப்புற நடத்தி வைத்தான். அதுமட்டுமா? நரஸியின் மகள் கர்ப்பமுற்றபோது, அவளுக்குச் செய்ய வேண்டிய மரேமு எனும் சடங்குகளை நடத்துவதற்கான பொருட்களையும் இறைவனே தந்தருளினான். நரஸியின் மகனது திருமண வைபவத்தையும், செல்வந்தர்போல் வந்து மதுசூதனனே நடத்தி வைத்தருளினான். ஒருமுறை, அவரின் தந்தையின் திவச தினம். உரிய நேரத்துக்குப் புரோகிதர் வந்துவிட்டார். திவசத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும், கடன்பட்டு வாங்கி வைத்திருந்தாள் மனைவி. இதோ... தாமோதரனைத் தரிசித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிச் சென்றவர், அங்கே பஜனையில் இறங்கி, பரவசத்தில் மூழ்கிப் போனார்! அனைத்தையும் அறியாமலா இருப்பான் தாமோதரன்?! சன்னதியில் இருந்து கிளம்பி, தனது பக்தரின் உருவில் அவரது வீட்டுக்குச் சென்றான். மணையில் அமர்ந்து, திதி கொடுத்துவிட்டுக் கோயிலுக்கு வந்து சேர்ந்தான். பரவச நிலையில் இருந்து மீண்டவருக்கு, தந்தையின் திவசம் நினைவுக்கு வர, விழுந்தடித்துக் கொண்டு ஓடினார் வீட்டுக்கு! மனைவி ஆச்சரியமுற்று, முழுவிவரமும் சொன்னாள். நடந்தவற்றைக் கேட்டதும் விக்கித்து நின்றார் அவர். அந்தக் கண்ணனே தனது உருவில் வந்து, தன் தந்தைக்குத் திதி கொடுத்திருக்கிறான் என உணர்ந்து சிலிர்த்தார். அந்த பக்தர் யார் தெரியுமா? வைஷ்ணவ ஜனதோ தேநே கஹியே ஜேபீட பராயி ஜானேரே, பரதுக்க உபகாரு கரே தோயே மன அபிமானந அநேரே... எனத் துவங்கி, எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் தமது தேன்குரலில் பாடிக் கேட்டிருக்கிறீர்களா? பிறர் படும் துயரைத் தனதெனக் கருதுபவன் எவனோ, அவனே உண்மையான வைஷ்ணவன்... எனத் துவங்கி, பல உயரிய கருத்துகளை எடுத்துரைக்கும் இந்தப் பாடல், மகாத்மா காந்திக்குப் பிடித்தமானது. மகாத்மாவின் பிரார்த்தனைக் கூட்டங்களில், தவறாமல் ஒலிக்கும் பாடல்! பக்தி, ஒழுக்கம், மனிதாபிமானம், நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்திய இதுபோன்ற எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார். மேலும் ஸ்ரீகண்ணன், தன் வாழ்வில் நிகழ்த்திய அருளாடல்களை, ஹுண்டி, மரேமு, புத்ர விவாஹ் போன்ற கவிதைகளால் பாடியுள்ளார் நரஸி மேத்தா. குஜராத்தி மொழியின் தலைசிறந்த கவிஞர் என அவரைப் போற்றிக் கொண்டாடினர் மக்கள். ரகுபதி ராகவ ராஜாராம் எனும் புகழ்மிக்க பாடலும், நரஸி மேத்தா இயற்றியதுதான். இறுதி வரை இறைவனைப் பாடி மகிழ்ந்த நரஸி மேத்தா, தனது 69-வது வயதில், மங்ரோல் எனும் இடத்தில் ஸ்ரீகண்ணனின் திருவடியை அடைந்தார். அவரின் திருவுடல் எரியூட்டப்பட்ட மயானம், அவரது நினைவாக, நரஸிங் நூ ஸம்ஷான் என அழைக்கப்படுகிறது.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.