பதிவு செய்த நாள்
04
ஜன
2014
10:01
மதுரை: பழமைக்கும், புதுமைக்கும் பாலமாக இறைவன் விளங்குகிறான், என, மதுரையில் துவங்கிய தேவாரத் தமிழிசை மாநாட்டில் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பேசினார். முனைவர் சுரேஷ் சிவன் வரவேற்றார். ரமேஷ்குமார் குழுவின் திருமுறை இசை நடந்தது.திருநாவுக்கரசர் இசை விருதுகளை வழங்கி, பொன்னம்பல அடிகள் பேசியதாவது: இயல், இசை, நாடக கலைகள் மூலம் இறைவனை தரிசிக்கிறோம். மார்கழியில் அதிகாலையில் பெண்கள் நீராடி நோன்பில் ஈடுபடுகின்றனர். நல்ல தலைவன் கிடைக்க வேண்டும் என, அவர்கள் தவத்தில் ஈடுபடுகின்றனர்.பழமைக்கும், புதுமைக்கும் பாலமாக இறைவன் இருக்கிறான். பழமையை முற்றிலும் புறந்தள்ளி விட முடியாது. பழமை, புதுமையிலுள்ள உட்கூறுகளை கிரகித்து வாழ்வது தான் வாழ்க்கை. பழமையான மக்கும் குப்பையை வயல்களில் இடுவதால், பயிர்கள் நன்கு வளர்கின்றன. பாற்கடலை கடைந்த போது, விஷம் உருவானது. அதை இறைவன் உண்டு, தேவர்களை காப்பாற்றினான். தன்னை தருகிற தியாகமே தலைமை பண்பு. பதவிகள், மாளிகையில் வாழ்வது மட்டும் வாழ்க்கை அல்ல. இதயங்களில் நல்ல எண்ணத்துடன் வாழ வேண்டும், என்றார். தியாகராஜர் கல்லுாரி முன்னாள் முதல்வர் அருணகிரி மற்றும் பலர் பேசினர். அரசு இசைப்பள்ளி பாலசுப்ரமணியன், மீனாட்சி கோயில் ஓதுவார் நாதன், சங்க இலக்கிய ஆய்வு மைய நிறுவனர் ஜெகதீசன், பாடகர் ரங்கநாயகி, நாதசுர ஆசிரியர் பழனிநாதன், நாதசுர வித்வான் வேல்முருகன், தவில் சண்முகம், மிருதங்கம் சிவக்குமார், அனந்தகிருஷ்ணன் விருது பெற்றனர். இன்றும், நாளையும் (ஜன., 4, 5) மாநாடு நடக்கிறது.