பதிவு செய்த நாள்
13
ஜன
2014
10:01
சேலம்: சிலந்தி நோயால் அவதிப்பட்டு வரும், சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானைக்கு, மயக்க ஊசி போட்டு, டாக்டர்கள், நேற்று சிகிச்சை அளித்தனர். சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், 39 வயது மதிக்கத்தக்க ராஜேஸ்வரி என்ற பெண்யானை உள்ளது. ஐந்து வயதில் இந்த யானை, முதுமலையில் இருந்து கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. 20 ஆண்டுக்கு முன், யானையின் இடது முன்னங்காலில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, யானை சற்று சாய்ந்த நிலையிலேயே காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன், யானையின் வலது பின்னங்காலின் மேற்பகுதியில், பெரிய கட்டி இருந்தது. இந்த கட்டியால், யானை மிகவும் அவதிப்பட்டது; சிகிச்சையில், கட்டி சரி செய்யப்பட்டது. நான்கு நாட்களுக்கு முன், யானையின் வாலுக்கு அடியில், சிலந்தி நோய் தாக்குதல் ஏற்பட்டு, பெரிய கட்டி வந்ததால், வலியால் யானை துடித்தது. கால்நடை டாக்டர் பாலசுப்ரமணியம், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர், யானைக்கு சிகிச்சையளிக்க நேற்று வந்தனர். மயக்க ஊசி போட்டனர். அது பயன் தராததால், இரண்டாம் முறை மயக்க ஊசி போடப்பட்டது. மூன்றாவதாக ஊசி போட்டு, யானையை மயக்க நிலைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் குழு யானையின் சிலந்தி கட்டி இருந்த இடத்தில், ஊசி செலுத்தி, சீழ்களை மாதிரிக்கு எடுத்தனர். சீழ் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசேதனை அறிக்கை வந்த பின், யானைக்கு, முறையான சிகிச்சை அளிக்கப்படும். நேற்று, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.