பதிவு செய்த நாள்
16
ஜன
2014
10:01
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில், மகர சங்கராந்தியை முன்னிட்டு, மகா நந்தியம் பெருமானுக்கு, 3 டன் எடையில், காய்கறி, பழங்கள் மற்றும் இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், 108 பசு, கன்றுகளுக்கு, சிறப்பு பூஜையும் நடத்தது. மகர சங்கராந்தி பெருவிழாவை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோவிலில், மூலவர் பிரகதீஸ்வரருக்கு, கடந்த, 14 மற்றும் 15ம் தேதிகளில், பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள, மகா நந்திக்கு, 14ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, 10 வகையான அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை, 8:00 மணி முதல், 9:00 மணி வரை, மகா நந்திக்கும், சுற்று வட்டாரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட, 108 பசு மற்றும் கன்றுகளுக்கும், பூஜை நடந்தது. முன்னதாக, 3 டன் எடையில், காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகளில், மகா நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, மூலவர் பிரகதீஸ்வரர் மற்றும் மகாநந்தியம் பெருமானை தரிசனம் செய்தனர்.