பதிவு செய்த நாள்
16
ஜன
2014
10:01
உடுமலை: உடுமலை அருகே பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் திருவிழா, நேற்று துவங்கியது; நாளை நிறைவடைகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு, உருவார பொம்மைகளை வைத்து பல மாவட்ட பக்தர்கள் இக்கோவிலில், பரிகாரம் செய்கின்றனர். உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு, இப்பகுதி மக்கள் மட்டுமின்றி, திருப்பூர், கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் பொங்கல் பண்டிகை ஒட்டி நடக்கும் திருவிழாவுக்கு வருகின்றனர். கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கவும், அவை நலமுடன் வாழவும், ஆல்கொண்டமால் கோவிலில், பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கலுடன் சேர்த்து மூன்று நாட்கள் இத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பொங்கலன்று பசுக்கள் ஈன்றெடுக்கும் கன்றுகளை உடுமலை சுற்றுப்பகுதி கிராம மக்கள் ஆல்கொண்டமால் கோவிலுக்கு தானமாக வழங்கி வருகின்றனர். மேலும், கிராம மக்கள் தாங்கள் பராமரித்து வரும் சலங்கை மாடுகளை திருவிழாவின் போது, கோவிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்து திரும்புவது வழக்கம். இந்தாண்டுக்கான இத்திருவிழா நேற்று காலை 5.00 மணிக்கு, சுவாமி சிறப்பு அலங்கார, பூஜையுடன் துவங்கியது. 11.00 மணிக்கு, சிறப்பு பூஜையும், மாலை 6.00 மணிக்கு உழவர் திருநாள் சிறப்பு பூஜையும் நடந்தன. திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று, காலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. 11.00 மணிக்கு, சிறப்பு பூஜை நடக்கிறது.
போலீஸ் பாதுகாப்பு: உடுமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், அவர்களின் பாதுகாப்புக்கும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சோமவாரப்பட்டியில் ஆங்காங்கே வேகத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பக்தர்களின் கூட்டத்தை கண்காணிக்க இரண்டு இடங்களில், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரோந்து பணியில் ஈடுபட தனி போலீஸ் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உடுமலை டி.எஸ்.பி., பிச்சை தலைமையில் குடிமங்கலம், அமராவதி நகர், கணியூர், தளி, மடத்துக்குளம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.