திருப்புல்லாணி கோயிலில் பகல் பத்து, ராப்பத்து உற்சவம் நிறுத்தம்: பக்தர்கள் வேதனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2014 02:01
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சுவாமி கோயிலில் கடந்த 20 ஆண்டுகளாக பகல்பத்து,ராப்பத்து உற்சவம் நடைபெறாமல் "சொர்க்கவாசல் திறக்கப்படுவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் சுவாமி கோயில் 108 வைணவ சேஷத்ரங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆழ்வார்களில் திருமங்கையாழ்வாரால் 20 பாடல்களால் மங்களாஸாசனம் செய்யப்பெற்ற புண்ணியதலம்.இங்கு மார்கழி மாத அமாவாசைக்கு மறு நாள் பகல் பத்து உற்சவம் துவங்கும். பத்தாவது நாளில் இரவு திருமங்கையாழ்வார் மோட்சம் நடைபெறும்.இதை தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவம் துவங்கும். தினமும் "சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பத்தாவது நாள் நம்மாழ்வரை பெருமாள் சுவாமி திருவடியில் சேர்த்து, துளசியினால் மூடி, பாசுரங்கள் பாடப்படும்,அதன் பின் துளசி கலைந்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர்.இந்த துளசி பிரசாதத்தை சாப்பிட்டால் குழந்தைபேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.இதனால் பக்தர்கள் அதிகமானோர் பங்கேற்று வந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக கோயில் நிர்வாகத்தினர் பகல் பத்து மற்றும் ராப்பத்து உற்சவம் நடத்தப்படாமல் வைகுண்ட ஏகாதசியில் "சொர்க்கவாசல் திறப்பு உற்சவத்தை மட்டும் நடத்தி வருகின்றனர்.இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டத்தில் இருந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். கோயில் வட்டாரத்தில் விசாரித்த போது, நிதி பற்றாக்குறை என்ற பெயரில் ஆன்மிக விதிகளுக்கு மாறாக உற்சவத்தை நிறுத்தி விட்டனர். நிர்வாகத்தில் இருந்து இது சம்பந்தமாக முறையான அறிவிப்பு செய்தால் ஏராளமான நன்கொடையாளர்கள் இதற்கான செலவை ஏற்றுக் கொள்தற்கு தயாராக உள்ளனர், என தெரிவித்தனர்.