பதிவு செய்த நாள்
18
ஜன
2014
10:01
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகேயுள்ள கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவில் தேர்த்திருவிழா நிகழ்ச்சியில் தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தேர் மெல்ல மெல்ல நகர்ந்து வலம் வந்தது.பொள்ளாச்சி அருகேயுள்ள கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 10ம் தேதி வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. கடந்த 11ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும்; தொடர்ந்து, யாகசாலை பூஜை, பலி பீட பூஜையும் நடந்தது.
நேற்றுமுன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 9:30மணிக்கு மேல் 10:30 மணிக்குள் சுவாமி திருத்தேரில் எழுந்தருள் நிகழ்ச்சியும் நடந்தது.மாலை 5:15மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி, செயல் அலுவலர் வெண்மணி, பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி, வெற்றிவேல், கோப்பன்ன மன்றாடியார் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் படை சூழ தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று சிவலோகநாதர் கோவில் முன் நிறுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இன்று மாலை 3:00 மணிக்கு மீண்டும் வடம் பிடித்து தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து, நேற்று முதல் நாளை(19ம் தேதி) வரை திருத்தேர் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். 20ம் தேதி மாலை 5:00 மணிக்கு பரிவேட்டை, இரவு 7:00 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும்; 21ம் தேதி காலை 9:00 மணிக்கு தரிசனம் பலி பீட பூஜை செய்தல், இரவு 7:00 மணிக்கு கொடி இறக்குதல்; 22ம் தேதி மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.