பிறவிச் சக்கரத்திலிருந்து மனிதன் விடுபட, பக்தி ஒன்றே வழி என்கிறார் ஆதிசங்கரர். பஜகோவிந்தம் என்னும் ஸ்தோத்திரத்தில், கற்ற கல்வியோ, தேடிய செல்வமோ நம்முடன் ஒருநாளும் வராது. கோவிந்தனின் திருநாமம் ஒன்றே துணை நிற்கும் என்கிறார். இந்த ஸ்தோத்திரத்தின் 19 வது பாடல் முடிவில், நந்ததி என்று மூன்று முறை குறிப்பிடுகிறார். நந்ததி என்றால் மகிழ்ச்சி. இதை மூன்றுமுறை சொல்லும்போது எல்லையில்லா மகிழ்ச்சி என்று பொருள்படும். உலகில் காணும் இன்பம் சிற்றின்பம். கடவுளோடு சேர்ந்தால் கிடைப்பது பேரின்பம். அதுவே நாம் பெற வேண்டிய உண்மையான மகிழ்ச்சி. அதற்காகவே, நாம் பிறவி எடுத்திருக்கிறோம், என்பது அவரது கருத்து.