சபரிமலை: மண்டல - மகரவிளக்கு காலம் முடிந்து சபரிமலை நடை நேற்று காலை அடைக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம்15-ல் தொடங்கிய மண்டல சீசன் டிச., 26-ல் நிறைவு பெற்றது. அதன் பின்னர் அதே மாதம் 30-ம் தேதி மகரவிளக்கு காலம் தொடங்கியது. ஜன.14-,ல் மகரவிளக்கு பெருவிழா நடைபெற்றது. அதன் பின்னர் 16,17,18 ஆகிய தேதிகளில் படிபூஜை நடைபெற்றது. 19-ம் தேதி மாளிகைப்புறம் கோயிலில் குருதி பூஜை நடைபெற்றது. நேற்று காலை ஆறு மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி மகம் நாள் திலிப் வர்மா சன்னிதானம் வந்து தரிசனம் நடத்தினார். தொடர்ந்து மேல்சாந்தி நடை அடைத்து சாவியை அவரிடம் ஒப்படைத்தார். பினனர் இந்த ஆண்டுக்கான வருமானம் எனக்கூறி ஒரு பணக்கிழியை கொடுத்தார். அந்த பணத்தையும், சாவியையும் மேல்சாந்தியிடம் கொடுத்து வரும் நாட்களிலும் பூஜைகளை தவறாமல் நடத்த வேண்டும் என்று கூறி திருவாபரணங்களுடன் புறப்பட்டு சென்றார்.