பதிவு செய்த நாள்
22
ஜன
2014
09:01
திருவாடானை: தொண்டி, நம்புதாளை கடற்கரையில், 500க்கும் மேற்பட்ட, சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவை, பூப்பதனிடுதல் முறையில், முகலாயர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட்டவையா என, போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். ராமநாதபுரம், தொண்டி கடற்கரையில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, இப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றவர்கள், அங்கே, சிறிய சுவாமி சிலைகள் கிடப்பதை கண்டனர். தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்.ஐ., இந்திரா உட்பட போலீசார் மற்றும் மீனவர்கள், கடலில் இறங்கி, மேலும் சிலைகள் இருக்கின்றனவா என, தேடினர். இதில், சுவாமி சிலைகள், மந்திர எழுத்து பொறித்த செப்புத்தகடுகள், ஸ்படிகலிங்கம், பச்சை நிற சிவன் சிலைகள் கிடந்தன. மேலும், கடற்கரை மணல் பகுதிகளிலும், தோண்ட தோண்ட, வெள்ளி மற்றும் வெண்கல சிலைகள் கிடைத்தன. தொடர்ந்து, நம்புதாளை கடற்கரையில் உள்ள, முருகன் கோவில் பின்புறமுள்ள ஆற்றில், நான்கு அடி உயர காளி சிலை, மனித தலையை வெட்டி கையில் வைத்திருப்பது போன்ற நிலையில் கிடந்தது. மொத்தம், 500க்கும் மேற்பட்ட சிலைகள் கிடைத்துள்ளன. இதனால், அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சிலைகளை, மந்திர வாதிகள் பயன்படுத்தினரா அல்லது வெளி நாடுகளுக்கு கடத்த முயன்றவர்கள், இங்கு பதுக்கி வைத்திருந்தனரா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூப்பதனிடுதல்: இது குறித்து, வரலாற்று ஆர்வலர்கள் கூறியாதாவது: கடந்த, 13ம் நூற்றாண்டுகளில், டில்லியில் இருந்து, முகலாயர்கள், தமிழகத்தில் படையெடுப்பு நடத்தினர். அவர்களிடம் இருந்து, கோவில் சிற்பங்களை காக்க, உரிய பூஜைகள் செய்து, மண்ணுக்குள் புதைத்தனர். இந்த பாதுகாப்பு முறை, பூப்பதனிடுதல் என, அழைக்கப்படுகிறது.
சிலைகளை பாதுகாக்க: சில ஆண்டுகளுக்கு முன், ஆனந்தூர் மற்றும் தேவிப்பட்டினம் பகுதிகளில், பூப்பதனிடுதல் முறையில், பாதுகாக்கப் பட்ட சிலைகள் மீட்கப்பட்டன. தற்போது, கிடைத்துள்ள சிலைகளும், அந்த முறையில் பாதுகாக்கப்பட்டவை<யாக இருக்கலாம். தொல்லியல் துறையின், ஆய்வுக்கு பிறகே, முழுமை<யான தகவல்கள் தெரியவரும். இவ்வாறு, அவர்கள் கூறினர். கைப்பற்றப்பட்ட சிலைகள், திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.