பதிவு செய்த நாள்
24
ஜன
2014
11:01
மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் பாரதிதாசன் தெருவில் உள்ள ஸ்ரீமகா மாரியம்மன், ஸ்ரீமாவடி கருப்பு ஆலயங்கள் கிராம மக்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடந்தது. கும்பாபிஷேக விழா முன்னிட்டு நேற்று முன்தினம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். பின், சித்தி கணபதி பூஜை, புண்யாக வாகனம், மகா கணபதி பூஜை, மகாலட்சுமி பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்ட முதல் காலம் மற்றம் இரண்டாம் கால பூஜைகள் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டது. நேற்று காலை, 9.20 மணிக்கு யாத்ரா தானமும், கடம் புறப்பாடும் நடந்தது. பின்னர், 9.30 மணியளவில் புனித நீருற்றி ஸ்ரீமகா மாரியம்மன் விமான மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு மூலவர் அபிஷேகம், மகா தீபாராதனை செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., ஜோதிக்கண்ணன், டவுன் பஞ்சாயத்து தலைவர் கீதாஸ்ரீதர், முன்னாள் அ.தி.மு.க., நகர செயலாளர் பால்ராஜ், கவுன்சிலர் நாகமணி, தே.மு.தி.க., மாவட்ட துணை செயலாளர் பழனிச்சாமி உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராம தலைவர்கள் சுகுமாறன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கோவில் திருப்பணிக்குழு கமிட்டி மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு கேரளா செண்டைமேளம் நிகழ்ச்சி நடந்தது.