பதிவு செய்த நாள்
30
ஜன
2014
11:01
புதுச்சேரி: பூத்துறை கிராமத்தில் சிவோஹம் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தியான மையத்தில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. ஊசுட்டேரி அடுத்த பூத்துறை கிராமம், கணபதி நகரில், சிவோஹம் அறக்கட்டளை சார்பில், தியான மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவிமுக்தேஸ்வரர் என்ற திருப்பெயருடன், யோக தியானலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தியான மையம் திறப்பு விழா மற்றும் லிங்க பிரதிஷ்டை விழா கடந்த மாதம் 13ம் தேதி நடந்தது. பெருங்களத்தூர் சாரதா சக்தி பீடத்தின் அண்ணாமலையாண்டி சிவயோக சித்தர், லிங்கத்துக்கு கலசாபிஷேகமும், தீபாராதனையும் செய்தார். மாலையில், தியான லிங்கத்துக்கு மகா அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, 48 நாள் மண்டல பூஜை நடந்தது. நிறைவு நாளான நேற்று, சென்னை தாம்பரம் ஓம் அண்ணாமலையாண்டி சிவயோக சித்தர் தலைமையில் விசேஷ யாக பூஜை, மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவோஹம் அறக்கட்டளை தலைவர் சிபி சுவாமிநாதன் செய்திருந்தார்.