பதிவு செய்த நாள்
07
பிப்
2014
10:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவம், நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, காமாட்சியம்மன் கோவில். மாசி மாத பிரம்மோற்சவத்தின் துவக்கமாக, நேற்று முன்தினம் இரவு அங்குசார்ப்பணம், விநாயகர் உற்சவம் நடந்தது. நேற்று அதிகாலை, 5:05 மணிக்கு, கோவில் நுழைவு வாயிலில் உள்ள கொடிமரத்தில், காமாட்சியம்மன் படம் பொறித்த கொடியேற்றப்பட்டது. கொடிமரம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கொடியேற்றத்தையொட்டி, சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. காலை, 7:30 மணிக்கு, உற்சவர் காமாட்சியம்மன், சரஸ்வதி மற்றும் லட்சுமியுடன், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு மான் வாகன உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் கொடியேற்றத்தில் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர். இரண்டாம் நாளான இன்று காலை, மகரம் வாகனம் இரவு சந்திரப்ரபை வாகன உற்சவம் நடைபெற உள்ளது.