பதிவு செய்த நாள்
14
பிப்
2014
10:02
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த மாசி மக பிரம்மோற்சவம் தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிகளை தரிசனம் செய்தனர். விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழாவை முன்னிட்டு, கடந்த 14ல் மணிமுக்தாற்றங்கரையில் எழுந்தருளியுள்ள செல்லியம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதையடுத்து, தினமும் செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, உற்சவம் நடந்தன. 21ம் தேதி மாலை 5 மணியளவில் செல்லியம்மன் தேரோட்டம் நடந்தது. 25ம் தேதி ஆழத்து விநாயகர் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள், உற்சவம் நடந்ன. 2.2.14 அன்று ஆழத்து விநாயகர் தேரோட்டம் நடந்தது. 3ம் தேதி தீர்த்தவாரியுடன் 10 நாட்கள் ஆழத்து விநாயகர் உற்சவம் முடிந்தது.
விருத்தகிரீஸ்வரர் கோவில் 12 நாள் மாசிமக பிரம்மோற்சவம் 6.02.14ம் தேதி காலை 8.45 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதில், 11ம் தேதி நடந்த 6ம் நாள் திருவிழாவில், விபச்சித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளித்தார். அதையடுத்து, 9ம் நாள் திருவிழாவான தேரோட்டம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் துவங்கியது. முதல் தேரில் விநாயகர் நான்கு கோட்டை வீதிகள் வழியாக உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாளித்தார். அதையடுத்து, சுப்ரமணியர், விருத்தகிரீஸ்வர் உடனுறை விருத்தாம்பிகை, பாலாம்பிகை, சண்டிகேஸ்வர் ஆகியோர் தனித்தனி தேர்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, தேர்களை வடம்பிடித்து, சுவாமிகளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, நாளை(15ம் தேதி) தீர்த்வாரியும், 16ம் தேதி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் தெப்ப உற்சவம் நடக்கிறது. 17ம் தேதி இரவு சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் வீதியுலாவுடன் மாசி மக பிரம்மோற்சவம் முடிகிறது.