பதிவு செய்த நாள்
17
பிப்
2014
11:02
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சுந்தரபாண்டியம் பெரியகோயிலில், கூடுதல் கட்டடங்களுக்கான பூமிபூஜை நடந்தது.இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இக்கோயில் ,500 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்தது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்ற மன்னரால் கட்டப்பட்டது. சிதிலடைந்து கிடந்த இக்கோயில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ,ரூ. 2 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. தற்போது பக்தர்கள் மூலமாக சுப்பிரமணியசுவாமி சன்னதியில் மண்டபம் கட்டுதல், உணவுக்கூடம், வணிகவளாகம் அமைத்தல் உட்பட பல்வேறு கட்டடப்பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான பூமிபூஜை கோயிலில் நடந்தது. முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் வை.பழனிச்சாமி தலைமை வகித்தார். தொழிலதிபர் பால்பாண்டியன், முருகேசன் முன்னிலை வகித்தனர். கோயில் செயல்அலுவலர் அஜீத் வரவேற்றார். ஸ்ரீவி., தாசில்தார் ஜெயந்தி குத்துவிளக்கேற்றினார். சிவாச்சார்யார்கள் வேதமந்திரங்கள் முழங்க, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவரான வைகுண்டமூர்த்தி அய்யனார், பரிவார தெய்வங்களான மாமுண்டி கருப்பசாமி, பெரியகருப்பர், சப்த கன்னிமார்கள், சுப்பிரமணியசுவாமி, ராக்காச்சி, பேச்சி, சுந்தரமகாலிங்கசுவாமி, பைரவருக்கு, சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது. கோயில் கமிட்டி நிர்வாகிகள் நல்லாசிரியர் வைகுண்டம், தொழிலதிபர் ராஜாமணி, ஜெயபால் கலந்து கொண்டனர்.