பதிவு செய்த நாள்
19
பிப்
2014
10:02
கடலூர்: கடலூர் பெரிய நாயகி சமேத பாடலீஸ்வரர் கோவிலில் அர்த்தஜாம 63 நாயன்மார் வழிபாட்டு அறக்கட்டளை சார்பில், 63 நாயன்மார் நூதன உற்சவ விக்ரகங்களுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. அதனையொட்டி கடந்த 16ம் தேதி காலை அனுக்ஞை, கணபதி, லட்சுமி, நவகிரக ஹோமங்கள் நடந்தன. மாலையில் கோ பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், கும்ப அங்காரம், யாக சாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. இரண்டாம் நாளான நேற்று காலை 5:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி தீபாராதனை, யாத்ராதானத்தைத் தொடர்ந்து கடம் புறப்பாடாகி புதிதாக செய்யப்பட்ட விநாயகர் மற்றும் சந்திரசேகர் உற்சவர்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 63 நாயன்மார் மூலவர் விக்ரகங்களுக்கு சம்ப்ரோஷணத்தைத் தொடர்ந்து, புதிதாக செய்யப்பட்ட 63 நாயன்மார் உற்சவ விக்ரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு, புதிதாக செய்து கும்பாபிஷேகம் செய்யப்பட்ட விநாயகர், சந்திரசேகரர், 63 நாயன்மார்கள் மற்றும் தொகையாடியார்களின் உற்சவர் விக்கிரகங்கள் சர்வ அலங்காரத்தில் ராஜ வீதியுலா நடந்தது.