பதிவு செய்த நாள்
20
பிப்
2014
11:02
சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், முறைகேட்டில் ஈடுபட்டதாக, அர்ச்சகர், கேஸியர் ஆகிய இருவரை, அறநிலையத்துறை உதவி கமிஷனர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். சேலம் மேட்டுசீனிவாச தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜசிவம். இவர், சுகவனேஸ்வரர் கோவிலில், முறைஸ்தானீகராக (அர்ச்சகர்) பணியாற்றி வருகிறார். கடந்த, 2013, அக்டோபர், 8ம் தேதி, கோவிலில், ஸ்வர்ணாம்பிகை சன்னதியின் கதவை, தன்னிச்சையாக அடைத்து வைத்து, பக்தர்களின் வழிபாட்டுக்கு இடையூறு செய்தார். மேலும், வருகை பதிவேட்டில், கையெழுத்திடாமல், விடுப்பு எடுத்த நாட்களுக்கும் சேர்த்து கையெழுத்திட்டது, ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட்டது, கோவில் நிலங்களுக்கு எதிராக வழக்கு நடத்துவது என, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தார். அறநிலையத்துறை உதவி கமிஷனர் மாரிமுத்து விசாரணை மேற்கொண்டு, தியாகராஜசிவத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அதேபோல், 2013, டிசம்பர், 10ம் தேதி, கோவில் உண்டியல் திறப்பின்போது, மூன்று உண்டியலின் சாவிகள் காணாமல் போனது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. கேஸியர் வன்னியர்திலகம், தன்னுடைய லாக்கரில், அந்த சாவியை வைத்திருந்தது தெரியவந்தது. பதவியை தவறாக பயன்படுத்தியது, கவனக்குறைவு உள்ளிட்டவற்றால், கோவில் நிர்வாகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதால், வன்னியர்திலகத்தையும், உதவி கமிஷனர் சஸ்பெண்ட் செய்தார்.