பதிவு செய்த நாள்
26
பிப்
2014
06:02
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே சிவலிங்காபுரத்தில் ஏற்கனவே காளியம்மன்கோயில் கட்டுவதில் இரு தரப்பினரிடையே பிரச்னை உள்ளது. இந்நிலையில், வருவாய்துறை அனுமதி இல்லாமல், காளியம்மன் கோயில் கட்டும் பணியை ஒரு சமுதாயத்தினர் நேற்று துவக்கினர். சிவலிங்காபுரத்தில் ஏற்கனவே இருந்த காளியம்மன்கோயிலை புதுப்பிக்க இடித்தபோது, ஒரு சமுதாயத்திற்கும், ஊரில் உள்ள மற்ற சமுதாயத்தினரிடையேயும் பிரச்னை ஏற்பட்டது. அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இந்த பிரச்னை தொடர்கிறது. திடீரென பிரச்னை ஏற்படும்போது, அதிகாரிகள் சமரசம் செய்துவைத்துவிட்டு, முற்றுப்புள்ளி வைக்காமல் செல்வது வழக்கம். இந்நிலையில், இரு தரப்பும் வேறு இடங்களில் கோயில் கட்ட, வருவாய்துறையினரிடம் அனுமதி கோரினர். இரு தரப்புக்கும் அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று ஒரு சமுதாயத்தினர், அனுமதி பெறாமலே, கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன், தடையை எடுத்துகூறியும், கட்டுமான பணி தொடர்ந்தது. கட்டுமான பணியில் ஈடுபட்ட நவநீதகிருஷ்ணன், எங்கள் சமுதாய இடத்தில் கோயில் கட்டுகிறோம். கடந்த ஆறு ஆண்டுகளாக கோயில் இல்லாததால், பக்தர்கள் சிரமப்படுகின்றனர். வருவாய் துறையிடம் கோயில் கட்ட, பல மாதங்களாக அனுமதி கோரி வருகிறோம். கிடைக்கவில்லை, இழுத்தடிக்கின்றனர். கட்டுமான பணி துவங்கிவிட்டது, கும்பாபிஷேகம் நடைபெறும் என்றார்.