பதிவு செய்த நாள்
27
பிப்
2014
11:02
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவில் பிரசாதம் தயாரிக்க, தேவையான நெய்யை, உள்ளூரிலேயே கொள்முதல் செய்ய, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை கோவிலுக்கு தேவையான நெய், ஆண்டுக்கொரு முறை கொள்முதல் செய்யப்படுகிறது. சில ஆண்டுகளாக, கர்நாடக மாநிலத்திலிருந்து, நெய் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இதற்கான ஒப்பந்தம், ரத்து செய்யப்பட்டு, கடந்த ஆண்டு முதல், உத்தர பிரதேசம், பரேலி நகருக்கு மாற்றப்பட்டது. பரேலியிலிருந்து, 2,000 கி.மீ., தூரம் பயணம் செய்து, திருமலைக்கு நெய்யை எடுத்து வர வேண்டி உள்ளதால், அதன் தரம் பாதிக்கப்படுவதாக, தேவஸ்தானம் கருதியது. இதனால், பிரசாதங்களின் சுவையும், மணமும் குறைவதாக, பக்தர்களும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, ஐவர் குழுவை, உத்தர பிரதேசத்தின் பரேலி நகருக்கு, தேவஸ்தானம் அனுப்பியது. அங்கு சென்று, ஆய்வு மேற்கொண்டு திரும்பிய இந்தக் குழு, ஆய்வறிக்கையை, தேவஸ்தான செயல் அதிகாரி, எம்.ஜி.கோபாலிடம் சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து, திருப்பதியில் உள்ள, "பாலாஜி டெய்ரி நிறுவனத்தில், 1 கிலோ, 274 ரூபாய் என்ற விலைக்கு வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.