பதிவு செய்த நாள்
27
பிப்
2014
03:02
விருத்தாசலம்: விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளை சார்பில் பன்னிரு திருமுறைகளை செப்புத் தகட்டில் எழுதும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் பல்லவர் காலத்திலும், அதற்கு பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்கள் சைவத்திருமுறைகள் என்றும், திருமுறைகள் என்றம் அழைக்கப்படுகின்றன. பனிரெண்டு திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ள இவை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டிகள், திருவாலியமுதனார், புருடோத்தமநம்பி, சேதிராயர், திருமூலர், திருஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோண் நாயனார், சேரமான் பெருமான் நாயனார், நக்கீர தேவநாயனார், கல்லாடதேவ நாயனார், கபிலதேவநாயனார், பரணவ தேவநாயனார், இளம்பெருமான் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கீழார் பெருமான் ஆகியோரால் அருளப்பெற்றது.
10ம் நூற்றாண்டில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் கேட்பாரற்று கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு, அழிந்தவை போக எஞ்சியவற்றை நம்பியாண்டார் நம்பி என்பவர் 76 புத்தகங்களாக தொகுத்தளித்தார். இவை பழந்தமிழ் இசையையொட்டி சைவக் கோவில்கள், பாடசாலைகள், வீடுகளில் பாடப்பட்டு வருகின்றன. முதல் திருமுறையில் நின்று மலர்தூவி இன்று முதுகுன்றை நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே என திருஞானசம்பந்தர் அருளிய திருமுதுகுன்றம் என்றழைக்கப்பட்ட விருத்தாசலத்தில், அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளை சார்பில், சங்கர் என்பவர் 16க்கு 13 என்ற அங்குலம் அளவுள்ள 2,093 செப்புத் தகடுகளில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் உதவியுடன் பனிரெண்டு திருமுறைகளையும் அச்சிட்டு வருகிறார். இது குறித்து சங்கர் கூறுகையில், உலகில் தோன்றிய அனைத்து சமயங்களுக்கும் தோத்திர நூல்கள் உள்ளன. சில சமயங்களுக்கே சாத்திர நூல்களும் உள்ளன. அவற்றுள் சைவத்திற்கு சாத்திரமும், தோத்திரமும் வேறெந்த சமயத்திற்கும் இல்லாத சிறப்பாக அமைந்துள்ளன.
சாத்திரமாக மெய்க்கண்ட நூல்கள் என்று போற்றப்படுகின்ற சைவ சித்தாந்தமும், தோத்திரமாக பன்னிரு திருமுறைகளும் ஞான ஒளிவீசி மிளிர்கின்றன. இதன் மூலம் தமிழ் வேதங்கள் உலகெங்கும் விளங்கி, அனைவரும் நன்மைகள் பெற்றிட; புத்தக வடிவிலிருக்கும் பன்னிரு திருமுறைகளை கடந்த 6 மாதமாக செப்புத் தகடுகளில் எழுதி வருகிறோம். ஓலைச் சுவடிகள், புத்கதகங்களிலிருந்தபோது, வெறும் வடிவத்தை மட்டுமே பெற்ற திருமுறைகள், இனி வடிவத்தையும், உயிரோட்டத்தையும் பெறும். திருமுறைகளின் திருமுறைதிருப்பணி நிறைவடைந்தவுடன், சிதம்பரம் நடராஜர் கோவில் குளத்தில் தெப்பம் விட்டு, அதில் குடமுழக்கு செய்து, வழிபாடு நடத்தப்படும். பின்னர், திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி திருத்தலம் மற்றும் திருமுறைகளுக்கு பண் அமைத்த விருத்தாசலம், ராஜேந்திரப்பட்டினம் திருநீலகண்டர் திருத்தலத்தில் வழிபாடு நடத்தப்படும். தொடர்ந்து தமிழகத்திலுள்ள 276 திருத்தலங்களில் வழிபாடு செய்து, திருமூல நாயனார் அவதரித்த திருத்தலமான அறுபத்தொன்பது சாத்தனூரில் தாமரை சபை அமைத்து, சிவனுடன் எழுந்தருளச் செய்து, வழிபாடு நடத்தப்படும் என்றார்.