பதிவு செய்த நாள்
28
பிப்
2014
11:02
காஞ்சிபுரம் : குமரக்கோட்டம் முருகன் கோவிலில், மின் கசிவு காரணமாக மின்சார பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். காஞ்சிபுரம் நகர பகுதியில் குமரக்கோட்டம் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ராஜகோபுர முகப்பு வாசலில் மரத்தினால் ஆன, மின்சாதன பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில், நேற்று காலை 9:30 மணிக்கு திடீரென ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்தது.இதனை பார்த்த பக்தர்கள், அதிர்ச்சியடைந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.அதற்குள், கோவிலில் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த தீயணைப்பு சாதனங்களை பயன்படுத்தி, தீயை நிர்வாகிகளே அணைத்தனர்.பின்னர் அங்கு வந்த, தீயணைப்புத் துறையினர் விபத்து குறித்து விசாரித்தனர். சம்பவம் பற்றி அறிந்து, அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் அங்கு வந்து, தீ விபத்து பகுதியை பார்வையிட்டார். இந்த சம்பவத்தால், கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் செந்தில்வேலவன் கூறுகையில், மீண்டும் தீ விபத்து ஏற்படாமல் இருக்க, இரும்பினால் தயாரிக்கப்பட்ட மின்சாதன பெட்டியை பொருத்துமாறு, கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.