பதிவு செய்த நாள்
01
மார்
2014
11:03
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, சிவன் கோவில்களில், சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது.திருவள்ளூர் தேரடி வீதியில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் பிரதோஷம் மற்றும் சிவராத்திரி விழா நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு ரிஷப வாகனத்தில், திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தீஸ்வரர் கோவிலில் வலம் வந்தார்.மேலும், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு துவங்கி, நேற்று காலை, 6:00 மணி வரை, சிறப்பு நான்கு கால பூஜைகள் நடந்தன.காக்களூர் பூங்கா நகரில் உள்ள, சிவா - விஷ்ணு கோவிலில், சிவராத்திரி விழாவையொட்டி, புஷ்ப வனேஸ்வரருக்கு, நான்கு கால பூஜை நடந்தது. இதேபோல், மணவாள நகரில் உள்ள மங்களேஸ்வரர் கோவில், திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் உடறுறை வாசீஸ்வரர் கோவில், உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும், சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது. இரவு முழுவதும் பஜனை பாடல்கள் பாடப்பட்டன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.காஞ்சிபுரம்: திருப்போரூர் பிரணவ மலையில், பாலாம் பிகையம்மன் உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் சிவராத்திரி விழாவையொட்டி, கைலாசநாதருக்கு மகாபிஷேகமும், ருத்ர ஜபமும் நடத்தப்பட்டன. இதேபோல், மாமல்ல புரம் மல்லிகேஸ்வரர், அனுமந்தபுரம் அகோரவீர பத்ரர் கோவில்கள் உட்பட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களிலும், நான்குகால பூஜைகளுடன் சிவராத்திரி விழா நடந்தது.இதில், ஒவ்வொரு கால வழிபாட்டிற்கு பின், பக்தர்களுக்கு பலவித பிரசாதங்கள் வழங்கப்பட்டன.