பதிவு செய்த நாள்
12
மார்
2014
11:03
தஞ்சாவூர்: தஞ்சை அருகே காலவெள்ளத்தால், சிதைந்த சிவன் கோவில் இப்ப விழுமோ? எப்ப விழுமோ? என்ற, அவலநிலையில் காட்சியளிக்கிறது. இதை தொல்லியல்துறையினர் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் வேதனையுடன் வலியுறுத்தியுள்ளனர். தஞ்சையில் இருந்து கண்டியூர் வழியாக திருக்காட்டுப்பள்ளி செல்லும் ரோட்டில் கருப்பூர் கிராமம் உள்ளது. இந்த ஊர் கோனேரிராஜபுரம் எனவும் அழைக்கப்பட்டது. சோழர் கால கல்வெட்டில், ஆர்க்காட்டு கூற்றத்து மீபிரம்பிலான கருப்பூர் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கிராமத்திலுள்ள சிவன் கோவில் சிதைவுற்று எப்போது இடிந்து விழுமோ? என்னும் நிலையில் தற்போது உள்ளது. இதனால், வரலாற்று ஆய்வாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். சோழர் காலத்தில், ஆர்க்காட்டு கூற்றத்தில், அமைந்த ஊர்கள் வரலாறு குறித்து தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக தமிழ்ப்பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணி.மாறன் ஆய்வு நடத்தி வருகிறார். ஆய்வில் கிடைத்த பல்வேறு தகவல்கள் குறித்து, மேலும் அவர் கூறியதாவது: பல்லவர் காலத்தில் தஞ்சையிலுள்ள கருப்பூர் கிராமம் செழிப்புடன் திகழ்ந்தது. சோழ மண்டலத்தை கி.பி., 985ல் இருந்து கி.பி., 1014ம் ஆண்டு வரை முதலாம் ராஜராஜன் ஆண்டார். நிர்வாக வசதிக்காக, வளநாடு, நாடு, கூற்றம், ஊர் என, பிரித்தார். இதில், ஒரு வளநாடு தான் பாண்டிய குலாசனி.
இதற்குட்பட்ட ஆர்க்காட்டு கூற்றத்தில் அமைந்த ஊரே, மீபிரம்பில். இதுதான் தற்போது கருப்பூர் கிராமம். இக்கிராமத்தில், நெடுஞ்சாலையையொட்டி சிதைவுற்று அழியும் நிலையில், ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீ சுந்தரேசர் கோவில் உள்ளது. சோழர் ஆட்சிக்கு பிறகு சோழமண்டலம், பாண்டியர் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது பாண்டிய குலாசனி வளநாடு என, பெயர் மாற்றம் பெற்று, பாண்டிய குலபதி வளநாடு என ஆனது. கி.பி.,1,311ல் தமிழகம் நோக்கி படையுடன் டில்லி சுல்தான் தளபதி மாலிக்காபூர் வந்தார். இவரது படையினர், கோவில்களை தாக்கினர். தாக்குதலில் சிதைந்த கருப்பூர் அருகேயுள்ள செந்தலை சிவன் கோவில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதற்காக, அருகிலுள்ள கருப்பூர் சிவன் கோவில், நியமம் காளாபிடாரி கோவில், அமண்குடி சமணக்கோவில்களின் இடிபாட்டு பகுதிகள் எடுத்து வரப்பட்டுள்ளது. கோவிலின் கிழக்கு ராஜகோபுரம், திருமதில், மண்டபம் எடுத்து கட்டப்பட்டது. புதுப்பித்த பகுதியில், மேலே குறிப்பிட்ட கோவில்களின் கல்வெட்டு சாசனங்களை காணமுடிகிறது. இவற்றில் ஒரு சாசனம், செந்தலை சுந்தரேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தை ஒட்டிய திருமதிலில் உள்ளது. இதில், ஆர்க்காட்டுக்கூற்றத்து கருப்பூரான மீபிரம்பில் என்னும் சொல் காணப்படுகிறது. மீ பிரம்பில் என்னும் ஊர் பெயர், பின்னர் கோனேரிராஜபுரமாக மாறியது. இதற்கு, இப்பகுதி, கி.பி., 15ம் நூற்றாண்டில் விஜயநகர அரசு ஆதிக்கத்தின் கீழ் வந்ததுதான் காரணம். சோழமண்டலம், தொண்டைமண்டலம் என, இரு பகுதியை ஆண்டவர் கோனேரி தேவமகாராயன் (ஆட்சிக்காலம் கி.பி., 1,485-1495). இம்மன்னன் பெயரால், கருப்பூர் மீபிரம்பில் கோனேரிராஜபுரம் என, ஆனது. இங்குள்ள கற்றளி கோவிலான சிவன் கோவில், சோழர் காலத்தில் 8 பரிவாரங்களுடன் திகழ்ந்தது. ஆனால், சிவன் கோவில் தற்போது முழுவதும் சிதைந்துள்ளது. கோவில் கட்டுமானத்தின் அடிப்பகுதியில் விஜயநகர மன்னர் காலத்து வாளும், கேடயமும் கொண்டு போரிடும் வீரன் சிற்பம், 12 செ.மீ., வட்டத்துக்குள் செதுக்கப்பட்டுள்ளது. கருவறையில் சோழர் கால சிவலிங்கம், அருகே மற்றொரு சன்னதியில் அதே காலத்திய அம்மன் சிற்பம், உள்சுவரில் பிற்கால ஓவியம் உள்ளது. தொல்லியல் துறையினர் புதுப்பித்து, அழியாமல் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.