பதிவு செய்த நாள்
12
மார்
2014
05:03
திருப்பதி லட்டை ஒரு காலத்தில் "மனோகரம் என்ற பெயரில் அழைத்தார்கள். தினமும் உத்தேசமாக 6000 கிலோ கடலை மாவு, 12,000 கிலோ சர்க்கரை, 750 கிலோ முந்திரி பருப்பு, 200 கிலோ ஏலக்காய், 500 லிட்டர் நெய், 30 கிலோ எண்ணெய், கற்கண்டு 500 கிலோ, உலர்ந்த முந்திரி 600 கிலோ மற்றும் 50 கிலோ பாதாம் பருப்பு ஆகியவை பயன்படுத்த படுகின்றன.
ஏழுமலையானின் முக்கிய பிரசாதமான லட்டு, உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இதற்காக, நாள் ஒன்றுக்கு, இரண்டு முதல் மூன்று லட்சம் லட்டுகளை தேவஸ்தானம், திருப்பதியில் தயார் செய்கிறது. இதற்குதேவைப்படும், 3,300 டன்னிற்கு மேற்பட்ட நெய் கொள்முதல் செய்கிறது. இதற்காக, 100கோடி ரூபாய்வரை செலவிடுகிறது தேவஸ்தானம். இந்த நெய் நறுமணம் குன்றாமல், இயற்கையான முறையில் சேமிக்க, ஆறு பெரிய சேகரிப்பு தொட்டிகளையும் வாங்குவதற்கு, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.மொத்தமாக நெய்யை வாங்கி சேமிப்பதால், நாளடைவில் நெய்யின் தரம் சிறிது, சிறிதாக குறைந்து விடுகிறது. இதனால், பிரசாதங்களின் மணம், சுவை ஆகியவை குறைய வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை ஆய்வு செய்ய, தேவஸ்தானம், ஒன்பதுபேர் அடங்கிய சிறப்பு நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளது.உடனடி தீர்வாக, பழைய நெய்யை கொள்முதல் செய்யாமல், புது நெய்யை கொள்முதல் செய்யலாம் என்ற முடிவுக்கு, தேவஸ்தானம் வந்துள்ளது. பற்றாக்குறை இல்லாமல் நெய்தொடர்ந்து கைவசம் இருக்கவும் இதில் ஏற்பாடு செய்யப்படும். இதற்கான நிரந்தர தீர்வை, சிறப்பு நிபுணர் குழுவின் ஆய்விற்குப் பின்,தேவஸ்தானம் முடிவு செய்யும் என, தெரிகிறது. அதன் மூலம் லட்டு நறுமணம் மேலும் சிறப்பாக இருக்கும் என, கூறப்படுகிறது.
லட்டுக்கு புவிசார் குறியீடு: திருப்பதி திருமலை கோவிலி்ல தயாரித்து பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவிற்க ஜி.ஐ எனப்படும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலில் மட்டுமே கிடைக்கும் லட்டு பிரசாதம் பிற இடங்களில் திருப்பதி லட்டு என்ற பெயரில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து உயர்நீதிமன்றம் தேவஸ்தானத்திற்கு ஆதரவாக அளித்த தீர்ப்பில் புவிசார் குறியீடு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.