பதிவு செய்த நாள்
11
மார்
2014
03:03
பிரம்மோற்சவம் ஆண்டு சேவை: தெப்போற்ஸவம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முன்னதாக ஐந்து நாட்கள் நடக்கும். பங்குனி ஏகாதசியன்று ராமர், சீதா, லட்சுமணருடன் சுவாமி புஷ்கரணி தெப்பத்தில் உலா வருவர். அடுத்த நாள் துவாதசியன்று ருக்மணியுடன் ஸ்ரீகிருஷ்ணர் உலா வருவார். இதையடுத்த மூன்று நாட்கள் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்ப உலா வருவர். நிகழ்ச்சி முடிந்தபிறகு சுவாமியை அருகில் சென்று பார்க்க கட்டணம் ரூ.2500. 5 பேர் பார்க்கலாம். மாலை 5 மணிக்கு இந்த சேவை ஆரம்பமாகும். பட்டு வஸ்திரம், ரவிக்கைத்துணி, ஒரு லட்டு, ஒரு வடை பிரசாதமாக வழங்கப்படும்.
வசந்த உற்சவம் : சித்திரை மாதம் (மார்ச் / ஏப்ரல்) திரயோதசி, சதுர்த்தசி மற்றும் பவுர்ணமி நாட்களில் இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த நாட்களில் மலையப்ப சுவாமி மற்றும் பரிவார தேவதைகள் வசந்த மண்டபத்திற்கு ஊர்வலமாக வருவர். அங்கு அபிஷேகம் நடத்தப்படும். மூன்றாவது நாள் சுவாமி யுடன் சீதாராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணி, சத்யபாமா ஆகியோர் ஊர்வலத்தில் வருவார்கள். மதியம் 1.30 மணிக்கு இந்த சேவை ஆரம்பமாகும். பட்டு அங்கவஸ்திரம், ரவிக்கைத் துணி, 20 தோசை, 6 வடை மற்றும் அன்ன பிரசாதம் வழங்கப்படும்.
பத்மாவதி பரிநயம் : வைகாசி மாதம் நவமி, தசமி மற்றும் ஏகாதசி திதி நாட்களில் பத்மாவதி பரிநயம் நிகழ்ச்சி நாராயணகிரி தோட்டத்தில் நடக்கும். இந்த தோட்டத்தில்தான் சீனிவாசனுக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடந்தது. இந்நாட்களில் மலையப்ப சுவாமி யானை, குதிரை, கருட வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தனித்தனி பல்லக்கில் வருவார்கள். அங்கு அவர்களுக்கு திருமணம் நடக்கும். அதன்பிறகு கொலுவு நிகழ்ச்சி நடத்தப்படும். ஹரிகதை மற்றும் கலைநிகழ்ச்சிகள் இந்நிகழ்ச்சியை ஒட்டி நடத்தப்படுகிறது. ரூ.5000 செலுத்தி 5 பேர் அருகில் இருந்து இந்த நிகழ்ச்சியை காணலாம். மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும்.
அபிதேயக அபிஷேகம் : மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் சேதமடையாமல் தவிர்ப்பதற்காக சிறப்பு திருமஞ்சனம் நிகழ்த்தப்படுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தை அடுத்து வரும் மூன்று நாட்கள் இந்த நிகழ்ச்சி நடக்கும். இதை ஜேஷ்டாபிஷேகம் என்று சொல்வார்கள். மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் கல்யாண உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அபிஷேகம் முடிந்தவுடன் வைரம் பதித்த வஜ்ர கவசம் அணிவிக்கப்படும். பின்னர் சுவாமிகள் ரதவீதிகளில் உலா வருவர். இரண்டாம் நாள் முத்தங்கி சேவை, மூன்றாம்நாள் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சுவாமி பவனி வரும்.
புஷ்ப பல்லக்கு: நமது பாரம்பரியப்படி கோயில்களில் புதுக்கணக்கு தட்சிணாயன காலத்தில் ஆரம்பிக்கப்படும். ஜூலை மாதம் 16ம் தேதி இதை ஒரு நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் திருமலையில் நடத்து கிறார்கள். அன்று வெங்கடாசலபதியிடம் ஆண்டுகணக்குகள் ஒப்படைக்கப்படும். இதற்காக அன்று மாலை 6 மணிக்கு சுவாமி புஷ்ப பல்லக்கில் பவனி வருவார். இந்த நிகழ்ச்சியில் கோயிலின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். அவர்கள் அனைவரும் சரியாகத்தான் கணக்கு வழக்குகளை பராமரிக்கின்றனரா என்று சுவாமி பரிசோதிப்பதாக ஐதீகம். இந்த நிகழ்ச்சியை 5 பேர் பார்க்க கட்டணம் ரூ.1000. ஒரு லட்டு, ஒரு வடை மற்றும் வஸ்திரங்கள் பிரசாதமாக தரப்படும். இந்த நிகழ்ச்சியை "புஷ்ப பல்லக்கு என்றே குறிப்பிடுவர். இந்தப் பெயரிலேயே தரிசன டிக்கட் புக் செய்ய வேண்டும்.