பதிவு செய்த நாள்
13
மார்
2014
11:03
வால்பாறை: வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன், முனிஸ்வரர் சுவாமி கோவில் மகாகும்பாபிேஷக விழாவையொட்டி நேற்றுமுன்தினம் மாலை 5.00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர்வழிபாடு, ஆனையந்து வழிபாடு, முளைப்பாரி வழிபாடு, ஐம்பூத வழிபாடு, திருமகள் வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு, புற்றுமண்வழிபாடு உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு மூன்றாம் காலவேள்வி நடந்தது. விழாவில் நேற்று காலை 6.00 மணிக்கு சிறப்பு யாக பூஜை நடந்தது. பின்னர் காலை 9.00 மணிக்கு, பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தக்குடத்தை பக்தர்கள் எடுத்து, கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின் காலை 9.40 மணிக்கு ராஜகோபுரத்திற்கு திருக்குட நன்னீராட்டுப்பெருவிழா நடந்தது. இதில் வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியிலிருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்தின் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து காலை 11.00 மணிக்கு வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். கோவிலை வலம் வந்த கருடன் கும்பாபிேஷகவிழாவிற்கு, வருகை தந்த பக்தர்களை கோவில் நிர்வாகிகள் சந்தனம், திருநீறு, குங்குமத்துடன் வரவேற்றனர். கும்பாபிேஷகத்திகற்காக காலை 9.10 மணிக்கு பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை, பக்தர்கள் எடுத்து, கோவிலை வலம் வந்த போது, கருடபகவான் கோவிலை சுற்றிலும் மூன்று முறை வலம் வந்தது. இதைக்கண்ட பக்தர்கள் தாயே... பராசக்தி.., ஓம்சக்தி.., என்று கூறி பக்திபரவசத்துடன் கருடனை வணங்கினர்.
ஆனைமலை ஆனைமலை அருகே உள்ள பெத்தநாயக்கனுார் கிராமத்தில், நேற்று ராஜ கணபதி மற்றும் கவுசலாம்பிகை சமேத பகவான் திருமலைசாமி திருக்கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிேஷகம் நடந்தது. இந்திருக்கோவில் கும்பிேஷகத்தை,ஆனைமலை ஆர்ஷ வித்யாபீட நிறுவனர் ததேவானந்த சரஸ்வதி சுவாமிகள் நடத்தினார். புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு கலசயாத்திரை நடந்தது. இதனையடுத்து நேற்று காலை 6.00 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்கி விழாவில், நாடி சந்தானம், கலச யாத்திரையுடன் கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தம், சரியாக 11.20 மணிக்கு கோபுர கலசத்தில் விடப்பட்டு மகா கும்பாபிேஷகம் நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிேஷகத்திற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர்பொதுமக்கள், மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா மக்கள் இயக்கத்தினர் செய்திருந்தனர்.