பதிவு செய்த நாள்
14
மார்
2014
11:03
ராசிபுரம்: புதியதாக கட்டப்பட்டு வரும், அத்தனூர் அம்மன் கோவிலில், ராஜகோபுரம் கட்டுவதற்காக, வாசற்கால் பூஜை, நடந்தது.ராசிபுரம் அடுத்த அத்தனூர் அம்மன் கோவில், திருப்பணிச் சங்கம் சார்பில், கடந்த, 2010ம் ஆண்டு முதல், திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூலவர் கர்ப்பகிரகம், கோபுரம், மகா மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது, கோவிலை சுற்றி சுற்றுச்சுவர் கட்டும் பணி நடக்கிறது.மேலும், விநாயகர், நித்திய விநாயகர், அத்தாயி, முனியப்பன், சப்த கன்னிமார், பைரவர் மற்றும் உரும்பு காளி சன்னதி ஆகிய உப சன்னதி கட்டும் பணி நடக்கிறது. இதை தொடர்ந்து, 68 அடியுடன், ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் பணி, சில மாதங்களுக்கு முன் துவங்கியது.அதையடுத்து, ராஜகோபுர வாசலில், கும்பம் வைத்து, வாசற்கால் பூஜை நடந்தது. ராசிபுரம் சிவன் கோவில் சிவாச்சாரியார் உமாபதி துவார பூஜை செய்தார். தலா, 21 அடி கொண்ட, நான்கு ராஜகோபுர வாசற்கால்கள் நிலை நிறுத்தப்பட்டது.முன்னதாக, அத்தனூர் அம்மன் ஸ்வாமிக்கு, சிறப்பு பூஜை நடந்தது.