நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயில்களுள் வேளிமலை குமாரசாமி கோயில் முக்கியமானதாகும். பல நூற்றாண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு இங்கு குடமுழுக்கு நடைபெற்றது. இங்கு முருகன், வள்ளி திருக்கல்யாண விழா வரும் 20ம் தேதி தொடங்குகிறது.அன்று காலை கணபதி ஹோமம், முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் திருவிளக்கு பூஜை நடக்கிறது. இரவு 6.30 மணிக்கு காப்புகட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. 21ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. சுவாமி வள்ளிக்குகை அருகில் உள்ள கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். மதியம் சுவாமி வள்ளி நாயகியுடன் மலையில் இருந்து பூப்பல்லக்கில் எழுந்தருளுகிறார். பின்னர்குறவன் படுகளம் நடக்கிறது. அப்போது முருகப்பெருமானிடம் குறவர்கள் சரணடைகின்றனர். இந்நிகழ்ச்சியை காண திரளான பக்தர்கள் கலந்து கொள்வர். தொடர்ந்து இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் முருகப்பெருமானுக்கும் வள்ளி நாயகிக்கும் திருக்கல்யாண முகூர்த்தம் நடைபெறுகிறது. அப்போது தேன்,தினைமாவு. அமிர்தம், லட்டு, மாங்கல்யம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இரவு சுவாமி வெள்மிக்குதிரையிலும், அம்மன் பூப்பல்லாக்கு வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர். 22ம் தேதி சுவாமியும் அம்மனும் பூப்பல்லக்கில் எழுந்தருளல் நடக்டகறது. 26ம் தேதி 7ம் விழாவன்று மாலை 5 மணிக்கு மயில், கிளி வாகனத்தில் சுவாமி , அம்பாள் ஆறாட்டுக்கு புறப்பட்டு 5.30 மணிக்கு திரு ஆறாட்டு நடைபெறகிறது. விழா ஏற்பாடுகளை வேளிமலை தேவஸ்தான திருவிழாக்குழு தேவசம்போர்டு அதிகாரிகள் செய்துள்ளனர்.