பதிவு செய்த நாள்
17
மார்
2014
10:03
சிவகங்கை : குன்றக்குடி, சண்முகநாதப்பெருமான் கோவிலில், கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக பணிகள் நேற்று துவங்கியது. சிவகங்கை, குன்றக்குடியில் சண்முகநாதப்பெருமான் கோவில் உள்ளது. குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம் 46வது குருமகா சன்னிதானம் சார்பில், கும்பாபிஷேக பணிகள் துவங்கியுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இங்குள்ள 11 புதிய கான்கிரீட் மண்டபங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இங்கு, 34 ஆண்டுகள் கழித்து, மார்ச் 19ல் கும்பாபிஷேகம் நடக்கிறது.
துவக்கம்: நேற்று காலை 7 மணிக்கு, அனுக்ஞை, விநாயகர் பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கியது. தொடர்ந்து, 2ம் கால யாகசாலை, 3 ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி பூஜைகள் நடைபெறும். மார்ச் 18ல், 4 மற்றும் 5ம் கால யாகசாலை பூஜைகள் நடக்கும். கும்பாபிஷேகம்: மார்ச் 19 அன்று, காலை 5 மணிக்கு, 6ம்கால யாகசாலை பூஜையுடன், கும்பாபிஷேகம் துவங்குகிறது. அன்று காலை 7:15 மணிக்கு, கடம் புறப்பாடும்; காலை 9:30க்கு, விமானங்களில் திருக்குட நன்னீராட்டும்; 10 மணிக்கு, மூலவர் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்படும். மாலை 5 மணிக்கு, சுவாமிக்கு மகா அபிஷேகமும், மாலை திருக்கல்யாணம் நடக்கும். இரவு 10 மணிக்கு, சுவாமி திருவீதி உலா வருவார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்க வசதியாக, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பரம்பரை அறங்காவலர் பொன்னம்பல அடிகள் தலைமையில், ஏற்பாடுகள் நடக்கிறது.