பதிவு செய்த நாள்
21
மார்
2014
11:03
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அர்ச்சுனாபுரம் அழகிய மணவாளப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம், விமரிசையாக நடந்தது. அர்ச்சுனா நதிக்கரையில் அமைந்துள்ளது இக்கோயில். பல்வேறு சிறப்புக் கொண்ட இக்கோயில், நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாமல் புதர்மண்டி காணப்பட்டது. இதை தொடர்ந்து, இரு ஆண்டுகளுக்கு முன், கோயிலை புதுப்பிக்க,பக்தர்கள் முன்வந்தனர். அதன்படி கோயில், பக்தர்கள் நன்கொடை, அரசு நிதி என, ரூ. 2 கோடி மதிப்பில், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மார்ச் 16 முதல் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து 4 நாட்கள் யாகபூஜைகள் நடந்தன. 5 ம் நாளான நேற்று, கும்பாபிஷேகம் நடந்தது. அதிகாலையில், யாகபூஜைகள் முடிந்து, பூஜிக்கப்பட்ட கும்பநீர், கோயிலை சுற்றி எடுத்துவரப்பட்டு, கோபுர கலசத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொழிலதிபர் ராசுப்பிரமணியராஜா முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், அன்னதானம் நடந்தது. லிங்கம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, கோயில் நிர்வாக அதிகாரி லதா உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அறநிலையத் துறையினர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை நிர்வாகிகள் கிருஷ்ணன், குமார், ராஜாளி, சுந்தர்ராஜன் , திருப்பணிக் கமிட்டியினர் செய்தனர்.