பதிவு செய்த நாள்
27
மார்
2014
12:03
சென்னை: திருவண்ணாமலை கிரிவலப்பாதைக்கு, இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்தில், மலைகளில், இரும்புத்தாது வெட்டி எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என, கோகுல மக்கள் கட்சி, கோரிக்கை விடுத்துள்ளது. கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், மாநில பொறுப்பாளர்கள் கூட்டம், சென்னை, மயிலாப்பூரில் நடந்தது. கட்சி தலைவர் சேகர், தலைமை தாங்கினார். கூட்டத்தில், கோகுல மக்கள் கட்சியை மதிக்கும், வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் கட்சிக்கும், கூட்டணிக்கும், லோக்சபா தேர்தலில், ஆதரவு அளிக்க, முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக முடிவெடுக்கும் பொறுப்பு, கட்சி தலைவரிடம் ஒப்படைப்பது என, தீர்மானிக்கப்பட்டது. மேலும், திருவண்ணாமலையில், கிரிவலப் பாதைக்கு, இடையூறு ஏற்படுத்தும் விதமாக, கவுந்தி மலை, வேடியப்பன் மலைகளில் இருந்து, இரும்புத்தாது வெட்டி எடுக்க, தனியார் நிறுவனம், முயற்சித்து வருகிறது. இத்திட்டத்தால், சுற்றுச்சூழல் மாசடைவதோடு, வெடி சத்தங்களால், காற்று மாசுபடும். இதனால், கிரிவலம் வரும் பக்தர்கள், கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, இத்திட்டத்தை கைவிட வேண்டும். இல்லையெனில், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.