தளவாபாளையம் மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்குதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2014 12:03
வேலாயுதம்பாளையம்: தளவாபளையம் மாரியம்மன் கோவில் பூக்குழு இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. கரூர் மாவட்டம் புன்செய் தோட்டக்குறிச்சி தளவாபாளையம் மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த கோவிலில் பங்குனி மாத திருவிழா முன்னிட்டு கடந்த, 18ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து கம்பம் எடுத்து வரப்பட்டது. திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியில் அம்மனை மலர்களால் அலங்காரம் செய்திருந்தனர். பின் வடிசோறு வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்சியாக பூக்குழி இறங்குதல் நடந்தது. இதில், அம்மன் அலங்காரத்துடன் பல்லக்கில் அமர்ந்து கோவிலை சுற்றி வலம் வந்தார். கோவில் முன், 30 அடி நீளத்தில் நெருப்புக்குண்டம் அமைக்கப்பட்டது. அதில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற அலகு குத்தி , பொங்கல் வைத்து, மா விளக்கு எடுத்தனர். நான்காம் நாள் நிகழ்ச்சியாக மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்துக் கொண்டு காவிரி ஆற்றில் விடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் மற்றும் ஊர்ப்பொது மக்கள் செய்திருந்தனர்.