பதிவு செய்த நாள்
09
ஏப்
2014
02:04
திருவள்ளூர் : மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், ராமநவமி விழா கோலாகலமாக நேற்று, கொண்டாடபட்டது. காக்களூர் பூங்கா நகரில் சிவா - விஷ்ணு கோவில் ஜலநாராயணர் சன்னிதி உள்ளது. ராமநவமியை முன்னிட்டு, சீதா சமேத கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கோதண்டராமருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து ராமரை வழிபட்டனர். தேவிநகரில் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலிலும், ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் ஆன்ந்த சாய்ராம் தியான கூடத்தில், ராமநவமியை முன்னிட்டு, காலை 5:00 மணிக்கு மகா அபிஷேகத்துடன் விழா துவங்கியது. காலை 6:30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணமும் காலை, 7:30 மணிக்கு துனி பூஜையும், 9:00 மணிக்கு சத்குரு சாயிநாதர் சிறப்பு பஜனைகள் நடைபெற்றன. இரவு 7:30 மணிக்கு ஆனந்த சாய்ராம் திருபல்லக்கில் பவனி நடந்தது. ஊத்துக்கோட்டை வட்டம், பெருமுடிவாக்கம் கிராமத்தில் கோதண்டராமர் கோவிலில், ராம நவமி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. நேற்று காலை 7:00 மணிக்கு, மூலவர், உற்சவர், சீதா பிராட்டி தாயார், வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. மாலையில் உற்சவர் வீதிஉலா நடைபெற்றது.