பதிவு செய்த நாள்
16
ஏப்
2014
12:04
ஆர்.கே.பேட்டை: சந்தான வேணுகோபால சுவாமி கோவில் சித்திரை பிரம்மோற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் சனிக்கிழமை, கருட சேவையும், ௨௨ம் தேதி, தேர் திருவிழாவும் நடக்கிறது. திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான சந்தான வேணுகோபால சுவாமி கோவில், எஸ்.வி.ஜி.,புரத்தில் உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட, வேணுகோபாலன், பசுவின் மீது சாய்ந்து, புல்லாங்குழல் வாசித்தபடி, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த கோவிலின், சித்திரை பிரம்மோற்சவம் நேற்று காலை 8:00 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலையில், அம்ச வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். நாளை சிம்ம வாகனத்திலும், வரும் சனிக்கிழமை மாலை கருட வாகனத்திலும் சுவாமி சேவை சாதிக்கிறார். தொடர்ந்து, 22ம் தேதி, தேர் திருவிழா நடைபெற உள்ளது. மறுநாள் பந்து விளையாடல், சக்கர ஸ்நானம் நிகழ்ச்சியுடன், விழா நிறைவு பெறுகிறது.