பதிவு செய்த நாள்
03
மே
2011
03:05
மனித வடிவிலான நந்திதேவர் கைகூப்பிய நிலையில், சிவன் சன்னதி எதிரே இருப்பதை செங்கல்பட்டு அருகிலுள்ள திருநிலைக் கோயிலில் காணலாம். தேவர்கள் தங்களை துன்புறுத்திய சுந்திரபத்தன் எனும் அசுரனை அழிக்கும்படி சிவனிடம் வேண்டினர். அப்போது அம்பாள் தவத்தில் இருந்தாள். சிவன், அம்பாளின் தவத்தை கலைந்து தன்னுடன் வரும்படி அழைத்தார். கோபமடைந்த அவள் சிவனை மானிடராக பிறக்கும்படி சபித்து விட்டாள். சிவன் பூமியில் மனிதராக தோன்றி பல தலங்களுக்கு சென்றார். அவர் இங்கு வந்தபோது, சாப காலம் முடிந்தது. அம்பாளும் இங்கு வந்து, தவறுக்கு மன்னிப்பு கேட்டு வணங்கினாள். பின் இத்தலத்தில் லிங்கமாக எழுந்தருளினார்.
சிவனுக்கு முன்புறம் நந்ததேவர் மனித வடிவில் இருக்கிறார். சிவன் மனித வடிவம் எடுத்து வந்தபோது, நந்தியும் மனித வடிவிலேயே அவருடன் வந்து இங்கே தங்கினார். பிரதோஷ நேரத்தில் இவருக்கு துளசி மாலை சாத்தி, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கிறது. 21 சிவகணங்கள் கோயில் மதிலில் அமைக்கப்பட்டுள்ளன. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் 21 மண் உருண்டைகள் பிடித்து அதனை சிவகணங்களாக பாவித்து பூஜிக்கின்றனர்.
மூன்றும் தரும் நந்தி: பொதுவாக, சிவாலயங்களில் சுவாமி சன்னதியில் எதிரில் ஒரு நந்தி இருக்கும். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள ஆயர்தர்மம் என்னும் கிராமத்திலுள்ள குருநாதசுவாமி கோயிலில் மூன்று நந்திகள் உள்ளன. கல்வி, செல்வம், வீரம் ஆகிய முச்செல்வங்கள் கிடைக்க பிரதோஷ வேளையில் இந்த நந்திகளிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இத்தலத்து மூலவர், தட்சிணாமூர்த்தி போல இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்ட கோலத்தில் காட்சி தருகிறார். வலது கையில் மலர் மொட்டு வைத்து, இடது கையை வரத முத்திரை காட்டியபடி வைத்திருக்கிறார். குரு அம்சமாக அருளுவதால் இவருக்கு குருநாதசுவாமி என்றே பெயர். பூஜையின் போது மஞ்சள் நிற வஸ்திரம் அணிவிக்கிறார்கள். குழந்தைகள் கல்வியில் சிறக்கவும், ஞாபக மறதி நீங்கவும் இவரிடம் வேண்டிக் கொள்கின்றனர். உற்சவர் சந்திரசேகரர் முன் மண்டபத்தில் இருக்கிறார். சிவனுக்கு வலப்புறம் அம்பாள் அங்காளபரமேஸ்வரி தனி சன்னதியில் இருக்கிறாள்.