பதிவு செய்த நாள்
28
ஏப்
2014
11:04
கோவை : கோவையில் ஏழு நாட்களாக விமரிசையாக நடந்த, ஸ்ரீ சத்யசாய் ஆராதனை மஹோத்ஸவ விழா, இரண்டு கோடி நாம அர்ச்சனை நிகழ்வோடு நேற்று நிறைவடைந்தது.ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் மூன்றாம் ஆண்டு ஆராதனை மஹோத்ஸவ நிகழ்ச்சிகள், 17 சேவா சமிதிகள் சார்பில், கோவையில் பல்வேறு இடங்களில் நடந்தன. நிறைவு நாள் நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரம் டி.வி.சாமி ரோட்டிலுள்ள காமாட்சியம்மன் கோவிலில் நடந்தது.காலை 9.௦௦ மணிக்கு ஆர்.எஸ்.புரம் சமிதி சார்பில், மெட்ரோ பஜன் குழுவினரின் ஸ்ரீ சத்யசாய்பஜன் நிகழ்ச்சிகள் நடந்தன. 9.3௦ மணிக்கு, நாம மஹிமை என்ற தலைப்பில், ஸ்ரீ சத்யசாய் கல்வி நிறுவன பேராசிரியர் வித்யாகர் உரை நிகழ்த்தினார்.அதில், நம் நாட்டில் பிறந்து, மக்களுக்கு பல அரிய அற்புதங்களை நிகழ்த்திக்காட்டிய மகான்கள், ரமணர், தியாகராஜர், வள்ளலார் உள்ளிட்ட ஏராளமான மகான்களை பற்றியும் அவர்கள் வாழ்வில், மக்களுக்கு செய்த செயல்களையும் குறிப்பிட்டு பேசினார். தொடர்ந்து, நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது. இதில் சத்யசாய் அமைப்பை சேர்ந்த பாலவிகாஷ் பிரிவு மாணவியர், சுவாமியின் பாடல்களை பாடினர். அதற்கேற்ப இசைக்கலைஞர்கள் கருவிகளை மீட்டி இசையாவர்த்தனம் செய்தனர்.பின், கோவையிலுள்ள ௧௭ சத்யசாய் சேவா சமிதிகள் சார்பில், சுவாமியின் பெயரில், இரண்டு கோடி நாம அர்ச்சனையும், 1008 அஷ்டோத்ர நாமாவளி ஜெபமும் நடந்தது. இதில், பொதுமக்களும், பக்தர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.