பதிவு செய்த நாள்
04
மே
2011
05:05
மதுரையில் கூடல் அழகர், கள்ளழகர், சுந்தரேஸ்வரர் என மூன்று அழகர்கள் காட்சி தருகின்றனர். கூடல் நகரமாகிய மதுரையின் மத்தியில், பிரம்மாவிற்காக அழகு ததும்ப காட்சி தந்ததால் மகாவிஷ்ணு, கூடல் அழகர் என்று பெயர் பெற்றார். இவரது அழகைக் கண்டு யாரும் திருஷ்டி போட்டு விடக்கூடாது என்பதற்காக, பெரியாழ்வார் இவரை
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
நின் சேவடி செவ்வித் திருக்காப்பு
என பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் எனப் பாடினார். இதை திருப்பல்லாண்டு என்பர். முடிவே இல்லாத இறைவனை முடிவே இல்லாமல் வாழ வேண்டும் என இல்லாத எண் ஒன்றைக் கொடுத்து பாடியது. பெருமாள் மீது அவர் கொண்ட பேரன்பை நிரூபிக்கிறது. எமதர்மனுக்காக, அழகு ததும்ப திருமாலிருஞ்சோலையில் (கள்ளழகர் கோயில்) காட்சி தந்ததால் இத்தலத்து பெருமாளும் அழகர் என்றே அழைக்கப்படுகிறார். தன்னை வணங்கும் பக்தர்களின் மனதை கொள்ளை கொள்பவர் என்பதால் இவருக்கு, கள்ளழகர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆண்டால் இவரை குழல் அழகர், வாயழகர், கொப்பூழில் எழுகமலப் பூவழகர் எனக் குறிப்பிட்டிருக்கிறாள். தவிர, மதுரையில் அருளும் சிவபெருமானும் சுந்தரேஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். சுந்தரர் என்றால் அழகன் என்று பொருள். இவ்வாறு மதுரையில் மூன்று அழகர்களைத் தரிசிக்கலாம்.