சிவபெருமான் சிதம்பரத்தில் நடனமாடிய கதை உங்களுக்கு தெரியும். ஆனால், பெருமாள் நடனமாடிய தலம் தெரியுமா? திருநெல்வேலி அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெருமாளுக்குரிய நவதிருப்பதிகள் அமைந்துள்ளன. இதில் ஒன்றான பெருங்குளம் செவ்வாய் தலமாக உள்ளது. திருக்குளந்தை என்பது இதன் புராணப் பெயர். ஸ்ரீநிவாசப்பெருமாள், உற்சவர் மாயக்கூத்தர், தாயார்கள் அலர்மேல் மங்கை, குளந்தைவல்லி ஆகியோர் இத்தலத்தில் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள தடாகவனத்தில் வேதசாரன் என்ற அந்தணர், மனைவி வேதவல்லியுடன் வசித்து வந்தார். குழந்தை இல்லாத அவர்கள், இப்பெருமாளை மனமுருகி வேண்ட அவர்களுக்கு பெண்குழந்தை பிறந்தது. கமலாவதி என்று பெயரிட்டு வளர்த்தனர். அப்பெண் விஷ்ணுவையே கணவனாக அடைய வேண்டும் என்று தவம் செய்தாள். இறைவனும் அவள் அன்பை ஏற்று மணம் புரிந்து கொண்டார். இங்குள்ள வனத்தில் அம்மசாரன் என்ற அசுரன் ஒருவன் இருந்தான். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் பல மாயங்கள் செய்து, நாட்டியமாடி அவனை சம்ஹாரம் செய்தார். தேவர்கள் பூமாரி பொழிந்து, இப்பெருமாளுக்கு மாயக்கூத்தன் என்று பெயரிட்டு அழைத்தனர். 108 திவ்யதேசங்களில் ஒன்றான இத்தலம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது.