பெரும்பாலான பெருமாள் கோயில்களில் ஆண்டாள் தனிச் சன்னதியில் தான் இருப்பாள். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி அருகில் தெரணியில் உள்ள வைகுண்டநாதர் கோயிலில் இவளை பெருமாள் சன்னதிக்குள்ளேயே தரிசிக்கலாம். கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில் இங்கு வசித்த பக்தர் ஒருவர், பெருமாளுக்கு கோயில் எழுப்ப வேண்டுமென ஆசை கொண்டார். தன் விருப்பத்தை மன்னரிடம் தெரிவித்தார். அவரும் சம்மதிக்கவே இங்குள்ள குசத்தலை ஆற்றில் கரையில் ஒரு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி, வைகுண்டநாதன் என திருநாமம் பெற்றார். சுவாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், நம்மாழ்வார் காட்சி தருகின்றனர். இவ்வாறு இரண்டு ஆழ்வார்களை பெருமாளின் சன்னதிக்குள் தரிசனம் செய்வது அபூர்வம். வைகுண்ட ஏகாதசி விழா இங்கு விசேஷமாக நடக்கும். அன்று சுவாமி, கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பார். செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் நல்ல வரன் அமையும் என நம்புகிறார்கள்.