ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி, திருவட்டார் பெருமாள் (கன்னியாகுமரி மாவட்டம்), கும்பகோணம் ஆராவமுதன் ஆகிய பெருமாள்கள் சயனநிலையில் உள்ளவர்களில் மிகவும் உயர்ந்த அம்சம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இந்தச் சிலைகளின் அமைப்பைக் கவனித்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். பெரும்பாலும் எந்த ஊராக இருந்தாலும், பெருமாளின் சரீரம் மல்லாக்கப் படுத்திருப்பது போல் இருக்கும். ஆனால் முகத்தை மட்டும் சற்று திருப்பி பக்தர்களைப் பார்ப்பது போல் இருப்பார். ரங்கநாதர் மேற்கே தலை வைத்து, கிழக்கு நோக்கி பாதம் நீட்டி தெற்கு பார்த்து (பக்தர்கள் நிற்கும் திசை) முகத்தை சற்றே திருப்பியிருப்பார். அதாவது நமக்கு இடது கை பக்கம் பெருமாளின் தலையும், வலது கை பக்கம் பாதங்களும் இருப்பது போல் அவரது சிலை வடிக்கப்படும். ஆனால், கையை மட்டும் பெயரளவுக்கு உயர்த்தி நம்மை ஆசிர்வதிப்பது போலத்தான் இந்தச் சிலைகள் இருக்கும். காரணம் கையை நன்றாக உயர்த்தி விட்டால் முகம் நமக்குத் தெரியாமல் போய்விடும். அதனால் சிற்பிகள் இவ்வாறு செய்துள்ளனர். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி தெற்கே தலை வைத்து வடக்கே பாதங்களை நீட்டியிருப்பார். இதில் இருந்து நாம் படுக்கும் போது மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் மட்டுமே தலை வைக்க வேண்டும் என்பதும் தெளிவாகிறது. இந்த பெருமாள்களின் முகம் கிழக்கு நோக்கியே இருக்கும். ஆனால், காஞ்சிபுரத்திலுள்ள திருவெஃகா என்னும் ஊரிலுள்ள சயனப்பெருமாள் மேற்கு நோக்கி முகம் திருப்பியுள்ளார். இங்கு மட்டும் பெருமாள் கையை நன்றாக உயர்த்தி பக்தர்களை ஆசிர்வதிப்பதைக் காண முடியும். மேற்கு பார்த்த முகம் என்பதால் இது சாத்தியமாகிறது. எனவே இவரை வணங்கி வருவது நலம் பயக்கும்.