விஷ்ணுவின் சொரூபமாகத் திகழ்வது சாளக்கிராமம். இது ஒரு வகை கல். இதற்கு சுருள் என்று பொருள். நேபாளத்தின் கண்டகி நதிக்கரையில் இது அதிகம் கிடைக்கிறது. பூஜிப்பதற்கு உகந்த மங்களகரமான சாளக்கிராமத்தின் அவதாரத் தலம் முக்திநாத் ஆகும். முக்திநாத்தில் சங்கு, சக்கர, கதாதரராக திருமகளுடன் பெருமாள் தரிசனம் தருகிறார். இதற்கு பின்னால் விஷ்ணுவின் அம்சமான மிகப்பெரிய அபூர்வ சாளக்கிராம மூர்த்தியை தரிசிக்கலாம். முக்திநாத் தரிசனம் செய்தவர்கள் பிறப்பு, இறப்பு என்னும் பிறவிச்சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். எம்பெருமானின் இருப்பிடமான வைகுந்தத்தில் நித்ய சூரியர்களாக வாசம் செய்வார்கள். இக்கோயிலில் ராமானுஜருக்கும் சன்னதி இருப்பது சிறப்பான அம்சம். வடநாட்டு நதிகள் எல்லாம் விஷ்ணுவின் சம்பந்தம் பெற்றிருப்பது போல கண்டகி நதியாகிய பெண் தேவதையும், பெருமாளிடம் அருள்பெற வேண்டும் என்று தவம் செய்தாள். அவளது விருப்பத்தை நிறைவேற்ற சாளக்கிராம ரூபத்தில் இந்நதியின் கரையோரத்தில் பெருமாள் அவதாரம் செய்து சிறப்பளித்தார்.