பதிவு செய்த நாள்
02
மே
2014
01:05
ராமாபுரம்: கோவில் நிலத்தில் சாலை அமைத்தது குறித்து, மாநகராட்சியிடம், இந்து சமய அறநிலைய துறை விளக்கம் கேட்டுள்ளது. வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட ராமாபுரத்தில், இந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள களிச்சாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. ராமாபுரத்தில் இருந்து துவங்கும் களிச்சாத்தம்மன் கோவில் சாலை, விவேகானந்தர் நகர் பிரதான சாலை வழியாக கே.கே. நகரை சென்றடையும். அந்த சாலை மிகவும் பழுதடைந்திருந்த நிலையில், மாநகராட்சி சார்பில் புதிய சாலை அமைக்கப்பட்டது. அப்போது களிச்சாத்தம்மன் கோவில் அருகே, அந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்திலும் சாலை அமைக்கப்பட்டது. அதை கோவில் வாசல் வழியாக நீட்டித்து, பிரதான சாலையுடன் இணைக்க வேண்டி இருந்த நிலையில், சாலை பணி குறித்து, அறநிலைய துறை, மாநகராட்சிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது. மேலும், கோவிலின் இருபுறமும், பள்ளம் தோண்டி சாலை அமைக்காமல் தடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அறநிலைய துறை அதிகாரிகள் கூறுகையில்,தற்போது கோவிலில் விரிவாக்க பணிகள் மற்றும் இந்த மாதம் திருவிழாவும் நடைபெற உள்ளன. இந்த நிலையில் கோவிலின் குறுக்கே சாலை அமைத்தால் அது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் என்றனர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,அது கோவில் இடம் என, தெரியவந்ததும் சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன என்றார்.