சிவன், பெருமாள் இருவரும் தனித்தனி கோயில்களில் காட்சி தருவர். சில கோயில்களில் இருவருக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டிருக்கும். தேனி மாவட்டம் கம்பம் அருகிலுள்ள சுருளித் தீர்த்தத்தில், மூலஸ்தானத்திற்குள்ளே அருகருகில் சிவன், பெருமாள் இருவரையும் தரிசிக்கலாம். தேவர்களைக் காப்பதற்காக மகாவிஷ்ணு, பூதாகரமான உருவத்துடன் தோன்றிய தலம் இது. எனவே இவர் பூதநாராயணர் என்றே அழைக்கப்படுகிறார். இவருக்கு வலப்புறத்தில் சிவன், மகாலிங்கம் என்ற பெயரில் அருளுகிறார். சிவன், பெருமாள் இருவரும் அருளுவதால் இங்கு விபூதியையே பிரசாதமாகத் தருகிறார்கள். உச்சிக்கால பூஜையின் போது மட்டும் திருநீறுடன் விஷ்ணுவுக்குரிய தீர்த்த பிரசாதமும் தரப்படுகிறது. சுரபி நதி என்னும், சுருளி தீர்த்தம் இங்கு அருவியாக கொட்டுகிறது. அமாவாசை நாட்களில் இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு.