பதிவு செய்த நாள்
05
மே
2014
11:05
ஓசூர்: ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவிலில், நாளை பல்லக்கு உற்சவ விழா நடக்கிறது.
ஓசூர் ராம்நகரில், 1,500 ஆண்டு பழமையான சுயம்பு கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மே மாதம், மாவிளக்கு மற்றும் பல்லக்கு உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த, 22ம் தேதி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டினர். விழாவை முன்னிட்டு, கடந்த, 23ம் தேதி முதல் கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஓசூர் ராம் நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள், மாவிளக்கு ஏற்றி, கோட்டை மாரியம்மனை வழிபட்டு வருகின்றனர். விழாவின், முக்கிய நிகழ்ச்சியான மாவிளக்கு மற்றும் பல்லக்கு உற்சவ திருவிழா, நாளை நடக்கிறது. இதையொட்டி, அம்மனுக்கு காப்பு கட்டிய பக்தர்கள், அலகு குத்தி வந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதைத்தொடர்ந்து, 7ம் தேதி இரவு, 7.30 மணிக்கு, சிடி உற்சவம், இரவு, 8 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், கோட்டை மாரியம்மன் ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோட்டை மாரியம்மன் ஆலய கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.