பதிவு செய்த நாள்
05
மே
2014
11:05
ஈரோடு: அக்னி நட்சத்திர துவக்கத்தை முன்னிட்டு ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலில், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் சித்திரை, வைகாசி மாதங்கள் அக்னி நட்சத்திர காலமாகும். அக்னி நட்சத்திரத்தில் உக்கிரமான வெயில் அடிப்பது வழக்கம். தமிழகத்தில் உள்ள சிவன் கோவில்களில், அக்னி நட்சத்திர காலத்தில், லிங்கேஷ்வரரை குளிர்ச்சி அடைய செய்வதற்கு, தாராவை அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு அக்னி நட்சத்திரம் நேற்று துவங்கியது. 28ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் உள்ளது. இதையடுத்து ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலில், சிவலிங்கத்துக்கு தாராவை அபிஷேகம் நடைபெற்றது. மண் பானையில் துவாரமிட்டு தண்ணீர் நிரப்பி, பச்சை கற்பூரம், ஏலக்காய், வெட்டிவேர், வில்வரமத்தின் காயை உள்ளே போட்டு, துவாரத்தின் வழியாக செல்லும் நூலில், குளிர்ந்த நீரானது, நாள் முழுவதும் லிங்கத்தின் மீது விழும்படியாக செய்து வைப்பது தான் தாராவை அபிஷேகமாகும். மேலும், 63 நாயன்மார்களுக்கு ஆரஞ்ச் நிற வஸ்திரம் அணிவித்து, வெயிலின் உக்கிரம் தனிந்து, மழை பெய்ய வேண்டி, சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அக்னி நட்சத்திர காலம் முழுவதுமாக தாராவை அபிஷேகம், சிவனுக்கு நடைபெறும் என கோவில் குருக்கள் தெரிவித்தார்.