பதிவு செய்த நாள்
05
மே
2014
03:05
திருப்பூர் : சத்ய சாயிபாபா, திருப்பூர் வந்து சென்று 24 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, "சத்ய சாயி அவதார வைபவம் என்ற தலைப்பில், வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருப்பூர் பி.என்.,ரோடு பகுதியில் உள்ள சத்ய சாயிபாபா கோவிலுக்கு, 1991ம் ஆண்டு மே 4ம் தேதி, சத்ய சாயிபாபா வருகை வந்தார். கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, ஆறு இடங்களில் சமிதிகளை திறந்து வைத்தார். பக்தர்களுக்கு ஆசி வழங்கி, சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார். சத்ய சாயிபாபா திருப்பூர் வருகை புரிந்து 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பாபா விஜயம் செய்த நாள், ஆண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது. நேற்று சிறப்பு பஜனையும், வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 5.30 முதல் 6.00 மணி வரை, கூட்டு பஜனை, அதைத்தொடர்ந்து, சென்னை சாயி மதுரம் வில்லுப்பாட்டு குழுவினரின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. "சத்ய சாயி அவதார வைபவம் என்ற தலைப்பில், ஏழு பேர் அடங்கிய குழுவினர், இந்நிகழ்ச்சியை நடத்தினர். "பிரபோ கணபதியே... என்ற பாடலுடன் துவங்கிய வில்லுப்பாட்டில், சத்ய சாயிபாபாவின் போதனை, சேவை, புட்டபர்த்தி கோவிலின் சிறப்பு குறித்து பாடப்பட்டது. முன்னதாக, சத்ய சாயிபாபா கோவில் ஒருங்கிணைப்பாளர்கள், சாயிபாபாவின் திருப்பூர் விஜயம் தொடர்பான, விசேஷ நிகழ்வுகளை, பக்தர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.