முருகப்பெருமானின் பிறப்புக்குப் பிறகு அவர் மகரிஷிகளின் மனைவியரிடம் வளர்ந்தார். அவர்கள் கார்த்திகைப் பெண்கள் எனப்பட்டனர். முருகனை வளர்த்த பெருமையுடையவர்கள் என்பதால் நட்சத்திரமாக உருப்பெற்றனர். கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில், முருகனைப் பெற்ற சிவனுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும், ஆடி மாத கார்த்திகையில் முருகனுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும் இவர்களுக்கு இரண்டு விழாக்களை பெறும் சிறப்பு கிடைத்தது. வேறு எந்த நட்சத்திற்கும் இருமுறை விழா கொண்டாடும் சிறப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நாளில் கார்த்திகைப் பெண்களை வணங்க வேண்டும். சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலம் சிவாலயத்தில் (கிழக்கு நோக்கிய தட்சிணாமூர்த்தி தலம்) கார்த்திகைப் பெண்களை சிலை வடிவில் தரிசிக்கலாம்.